Car Sale In November 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நவம்பர் மாத கார் விற்பனையிலும், மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

Continues below advertisement

நவம்பர் மாத கார் விற்பனை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயணிகள் வாகன விற்பனையானது, நவம்பர் மாதத்தில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, கடந்த மாதத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 3 லட்சத்து 52 ஆயிரம் யூனிட்கள் என்பதை காட்டிலும், இந்த ஆண்டில் சுமார் 20.7 சதவிகிதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி திருத்தத்திற்கு பிறகு குறைந்த விலையானது, கார் வாங்க வேண்டும் என்ற கனவினில் பலரும் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதன் பல கார் உற்பத்தி நிறுவனங்களும் நேர்மறையான வளர்ச்சி விவரங்களை வெளியிட்டுள்ளன. 

Continues below advertisement

உச்சாணிக்கொம்பில் மாருதி

மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி ப்ராண்ட் சார்பில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 971 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் சந்தையில் நவம்பர் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தால் விற்பனையான அதிகபட்ச பயணிகள் வாகன எண்ணிக்கை இதுவாகும். ஏறுமதியுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 21 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை மாருதி சுசூகி பதிவு செய்துள்ளது. 

தொடர்ந்து சாதிக்கும் டாடா:

மின்சார வாகனங்களையும் சேர்த்து பயணிகள் வாகன சந்தையில் நவம்பர் மாதத்தில், உள்ளூர் சந்தையில் டாடா நிறுவனம் 57 ஆயிரத்து 436 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.  கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் பதிவான 47 ஆயிரத்து 63 யூனிட்களை காட்டிலும், 22 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது. உள்ளூர் விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியையும் சேர்ந்த்து, கடந்த மாதத்தில் 7 ஆயிரத்து 911 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 5 ஆயிரத்து 202 யூனிட் விற்பனையை காட்டிலும் 52 சதவிகிதம் அதிகமாகும். உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து நவம்பர் மாதத்தில் 59 ஆயிரத்து 199 யூனிட்களை டாடா விற்பனை செய்துள்ளது.

டாப் கியரில் ஹுண்டாய்

உள்நாட்டில் அதிகரித்த தேவையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்து 340 யூனிட்களை ஹுண்டாய் விற்பனை செய்துள்ளது.  இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.3 சதவிகிதம் அதிகம். வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி 16 ஆயிரத்து 500 யூனிட்களாக அதிகரித்து கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 26.9 சதவிகித விற்பனை பதிவாகியுள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வென்யு கார் மாடலானது ஒரே மாதத்தில் 32 ஆயிரம் புக்கிங்கை பெற்று, விற்பனைக்கு பெரும் ஊக்கமளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 66 ஆயிரத்து 840 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

தடுமாறும் மஹிந்த்ரா

மஹிந்த்ரா நிறுவனத்தின் வளர்ச்சியில் எஸ்யுவி வாகனங்களின் பங்களிப்பு தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது. உள்நாட்டு சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் 56 ஆயிரத்து 336 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை காட்டிலும் 22 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியையும் சேர்த்தால் மஹிந்த்ரா நிறுவனத்தின் கடந்த மாத ஒட்டுமொத்த விற்பனை, 57 ஆயிரத்து 598 யூனிட்களாக பதிவாகியுள்ளது. ஆனாலும், முதல் மூன்று இடங்களுக்குள் நுழைய முடியாமல் தடுமாறி வருகிறது.

டொயோட்டா விற்பனை

டொயோட்டா நிறுவனமானது ஒட்டுமொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 33 ஆயிரத்து 752 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டுசந்தையில் 30 ஆயிரத்து 85 யூனிட்களும், வெளிநாட்டு சந்தையில் 3 ஆயிரத்து 67 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை காட்டிலும் இது 28 சதவிகிதம் அதிகம் ஆகும். 

கியா கொண்டாட்டம்

நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த மாதத்தில் கியா நிறுவனம் 25 ஆயிரத்து 489 யூனிட்களை விற்பனை செய்துளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 24 சதவிகிதம் அதிகமாகும். கியாவின் புதிய சோனெட் நிறுவனத்தின் விற்பனையில் 30 சதவிகித பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது. கடந்த மாதத்தில் 3 ஆயிரத்து 4 யூனிட்களை கியா நிறுவனம் ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது. கியா நிறுவனத்தின் உள்நாட்டு செய்ல்பாடு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI