Car Sale: ஆஃபரை அள்ளிக் கொடுத்தும் கண்டுக்கல.. ஹுண்டாய்க்கு என்ன ஆச்சு? மாருதி, டாடா, மஹிந்த்ரா ஹாப்பி
Car Sale Oct 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் மாத கார் விற்பனையில் ஹுண்டாய் நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Car Sale Oct 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் மாத கார் விற்பனையில் ஹுண்டாய் நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அக்டோபர் மாத கார் விற்பனை:
ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு, அக்டோபர் மாதத்தில் கார் சில்லறை விற்பனை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. டீலர் மற்றும் கஸ்டமர் இடையேயான விற்பனையில் ஒவ்வொரு கார் பிரிவும் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் விழாக்கால சலுகைகள் ஆகியவை கார் விற்பனையை ஊக்கப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஒட்டுமொத்த கார் மற்று இருசக்கர வாகனங்களுக்கான சில்லறை விற்பனையானது 40.5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும். இதில் கார் சந்தை மட்டுமே 11.5 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது.
மாஸ் காட்டும் மாருதி, டாடா..
அக்டோபர் மாத கார் சில்லறை விற்பனையை கருத்தில் கொண்டால், கடந்த ஆண்டில் விற்பனையான 5 லட்சத்து 578 யூனிட்களை காட்டிலும், 11.35 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசுகி 42.98% பங்களிப்போடு சந்தையில் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,03,347 யூனிட்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் மாருதி நிறுவனம் 2,39,567 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதாவது 36 ஆயிரத்து 220 யூனிட்கள் இந்த ஆண்டு கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள டாடா, கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதலாக 8 ஆயிரத்து 449 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்த்ரா நிறுவனம் கூடுதலாக 5 ஆயிரத்து 576 யூனிட்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
நிறுவனங்களின் சில்லறை விற்பனை பட்டியல்:
| ப்ராண்ட் | அக்டோபர் -24 | அக்டோபர் -24 | வித்தியாசம் | சந்தை பங்களிப்பு |
| மாருதி | 2,39,567 | 2,03,347 | 36220 | 42.98 |
| டாடா | 75,352 | 66,903 | 8449 | 13.52 |
| மஹிந்த்ரா | 67,918 | 62,342 | 5576 | 12.19 |
| ஹுண்டாய் | 65,442 | 70,230 | -4788 | 11.74 |
| டொயோட்டா | 34,868 | 30,569 | 4299 | 6.26 |
| கியா | 32,961 | 29,808 | 3153 | 5.91 |
| ஸ்கோடா ஃபோக்ஸ்வாகன் | 12,202 | 9,022 | 3180 | 2.19 |
| ஹோண்டா | 7,232 | 7,393 | -161 | 1.30 |
| எம்ஜி | 5,819 | 5,905 | -86 | 1.04 |
| ரெனால்ட் | 5,056 | 4481 | 575 | 0.91 |
| நிசான் | 2,562 | 2711 | -149 | 0.46 |
| மெர்சிடஸ் | 1,854 | 1929 | -75 | 0.33 |
| பிஎம்டபள்யு | 1,483 | 1636 | -153 | 0.27 |
| ஃபோர்ஸ் | 1,391 | 736 | 655 | 0.25 |
| சிட்ரோயன்/ஜீப் | 1,306 | 1298 | 8 | 0.23 |
| BYD | 570 | 399 | 171 | 0.10 |
| JLR | 449 | 545 | -96 | 0.08 |
| மற்றவை | 1341 | 1324 | 17 | 0.24 |
ஹுண்டாய்க்கு என்ன ஆச்சு?
இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஹுண்டாய் நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபரில் 6.82 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதாவது 4 ஆயிரத்து 788 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாதாந்திர விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான போட்டித்தன்மை மற்றும் ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக மாறிய சந்தை சூழல் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் ஹுண்டாய் நிறுவனம் க்ரேட்டா மற்றும் வென்யு போன்ற எஸ்யுவிக்கள் மீது அதிக கவனம் செலுத்தி நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளது. ஆனால், செடான், ஹேட்ச்பேக் போன்ற மற்ற பிரிவுகளில் ஹுண்டாயால் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியாததே, இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.





















