BYD Plug In Hybrid Car: சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனத்தின் சார்பில் இந்திய சந்தைக்கான முதல் ஹைப்ரிட் கார் மாடல் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Continues below advertisement

BYD ஹைப்ரிட் கார்:

இந்திய சந்தைக்கான தனது முதல் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார் மாடலை வரும் ஜுன் மாதம் 9ம் தேதி சந்தைப்படுத்த சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய காரானது ப்ராண்டின் டூயல் மோட் இண்டெலிஜெண்ட் (DM-i) எனப்படும் சூப்பர் ப்ளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய காரின் பெயர் மற்றும் விவரங்கள் எதையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அதனால், சர்வதேச சந்தையில் ப்ராண்ட் சார்பில் விற்பனையில் உள்ள ஆட்டோ 2 DM-i அல்லது சீலியன் 6 PHEV ஆகிய இரண்டு கார் மாடல்களில் ஏதோ ஒன்று தான் இங்கு விற்பனைக்கு வரவுள்ளதாக கணிக்கப்படுகிறது.

Continues below advertisement

DM-i தொழில்நுட்பம் என்றால் என்ன?

புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகன சிஸ்டமானது, BYD-யின் புகழ்பெற்ற ப்ளேட் பேட்டரி, சியாவோயின் எனப்படும் அதிக செயல்திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின் மோட்டார்கள், கன்ட்ரோலர், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இண்டெலிஜெண்ட் எனர்ஜி மேனேஜ்மெண்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மின்சார ஹைப்ரிட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில்  பேட்டரி பேக் பெரும்பாலான நேரம் மின்சார மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும். ஒரு முழுமையான மின்சார வாகனத்தைப் போலவே இது இயங்கும். இந்த அமைப்பானது எரிபொருள் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைப்பதோடு, நீண்ட தூரம் பயணிக்கும் திறனையும் வழங்குகிறது.

பேட்டரியின் ஆற்றல் குறையும்போது, ​​பெட்ரோல் இன்ஜின் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. அதே நேரத்தில் மின்சார மோட்டார் தொடர்ந்து சக்கரங்களை இயக்குகிறது. அதிக வேகத்தில், பெட்ரோல் மோட்டார் நேரடியாக சக்கரங்களை இயக்குகிறது, தேவைப்படும்போது மின்சார மோட்டார் உதவி அளிக்கிறது. உலகளவில், BYD நிறுவனம் தனது DM-i தொழில்நுட்பத்தை சீல், சாங் பிளஸ், கின் பிளஸ், டெஸ்ட்ராயர் 05, ஹான், டாங் மற்றும் சீல் 06 போன்ற மாடல்களில் பயன்படுத்துகிறது.

BYD ஆட்டோ 2 DM-i கார் விவரங்கள்:

சர்வதேச சந்தையில் ஆட்டோ 2 DM-i  கார் மாடலானது 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 7.8KWh அல்லது 18KWh பேட்டரி பேக் உடன் இணைந்து செயல்படுகிறது. இது முறையே 166bhp மற்றும் 212bhp ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சிறிய பேட்டரியானது 928 கிலோ மீட்டரும், பெரிய பேட்டரி பேக் 998 கிலோ மீட்டர் ரேஞ்சும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 7.5 விநாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுமாம்.

இந்திய சந்தைக்கு வந்தால் இதன் விலை 18 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம். உள்ளூர் சந்தையில் சீன ப்ராண்டானது டாடா கர்வ், க்ரேட்டா எலெக்ட்ரிக் மற்றும் மாருதி சுசூகி இ விட்டாரா ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளக்கூடும். வெகுஜன சந்தை வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, இதனை இந்தியாவிற்கு கொண்டுவரவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

BYD சீலியன் 6 PHEV

BYD சீலியன் 6 PHEV ஆனது, 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், 18.3kWh அல்லது 26.6kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக இது ஆயிரத்து 92 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷனை கொண்ட 1.5L நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் PHEV, 218bhp ஒருங்கிணைந்த ஆற்றலை வழங்குவதோடு, 140 கிலோ மீட்டர் வரை முழுமையான மின்சார காராக பயணிக்கும் திறனை கொண்டுள்ளதாம்.  மறுபுறம், ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனைக் கொண்ட 1.5L டர்போ பெட்ரோல் PHEV, 344bhp வரையிலான ஆற்றலையும், 128 கிலோ மீட்டர் தூரம் வரை முழு மின்சார வாகனமாகவும் பயணிக்கும் திறனை கொண்டுள்ளதாம்.

இதையும் படியுங்கள்: ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி

உள்ளூர் சந்தையில் இந்த காரின் விலையானது 40 முதல் 50 லட்சம் வரை விலை வரம்பை பெறக்கூடுமாம். ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஹுண்டாய் ஐயோனிக் 5, கியா EV 6 உள்ளிட்ட கார் மாடல்கள் இந்தியாவில் போட்டியாளர்களாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI