சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது பிரீமியம் பிராண்டான 'டென்சா'வை (Denza) இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது அட்ஸோ 3, eMAX 7, சீல் மற்றும் சீலியன் 7 ஆகிய மாடல்களை விற்பனை செய்யும் BYD, டென்சா மூலம் சொகுசு கார் சந்தையில் நுழைகிறது. இதன் முதல் மாடலாக 'டென்சா இசட்9 ஜிடி' (Denza Z9 GT) எலக்ட்ரிக் கார் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகலாம். முழுமையாக கட்டமைக்கப்பட்ட (CBU) மாடலாக இறக்குமதி செய்யப்படவுள்ள இதன் விலை ரூ.1.2 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

வேகம் மற்றும் செயல்திறன்


2.9 டன் எடை கொண்ட இக்கார், 0-ல் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ ஆகும். முன்பக்கம் ஒரு எலக்ட்ரிக் மோட்டார், பின்பக்கம் இரண்டு என மொத்தம் மூன்று மோட்டார்கள் இணைந்து 1,140 bhp பவரையும், 1,210 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன.

Continues below advertisement

பேட்டரி மற்றும் ரேஞ்ச்


இதில் 122.5 kWh இரண்டாம் தலைமுறை பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கி.மீ ரேஞ்ச் தரும். காரின் கட்டமைப்புடன் பேட்டரியை ஒருங்கிணைக்கும் 'செல்-டு-பாடி' தொழில்நுட்பம் இதில் உள்ளதால் இடவசதியும், வலிமையும் மேம்பட்டுள்ளது. இந்தியாவில் சரியான உள்கட்டமைப்பு அமைந்தால், 1,500kW ஃப்ளாஷ் சார்ஜிங் மூலம் 10 முதல் 70 சதவீதத்தை 5 நிமிடங்களிலும், 97 சதவீதத்தை 9 நிமிடங்களிலும் சார்ஜ் செய்துவிட முடியும்.

வடிவமைப்பு மற்றும் பிரீமியம் வசதிகள்


வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது 5,180 மிமீ நீளமும், 1,990 மிமீ அகலமும், 3,125 மிமீ வீல்பேஸும் கொண்ட பெரிய காராகும். ஏர் சஸ்பென்ஷன், நெருக்கடியான இடங்களில் காரை எளிதாக திருப்ப உதவும் ரியர்-வீல் ஸ்டீயரிங் மற்றும் காரை பக்கவாட்டில் நகர்த்தும் சிறப்பு அமைப்பு ஆகியவை இதில் உள்ளன.

உட்புறத்தில் 5 ஸ்கிரீன்கள், கேமரா அடிப்படையிலான வெளிப்புற கண்ணாடிகள் (ORVM), சீட் மசாஜ், ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் ஆகிய ஹைடெக் வசதிகள் உள்ளன.

விற்பனை திட்டம்


இந்த கார்களை விற்க டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் தனி டென்சா ஷோரூம்கள் திறக்கப்படவுள்ளன. Z9 GT உடன், டென்சா D9 சொகுசு எம்பிவி (MPV) காரும் ஆரம்ப மாடலாக வரலாம். அபாரமான பவர், அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் என இருந்தாலும், சார்ஜிங் வசதிகள் மற்றும் பிராண்ட் மதிப்பு ஆகியவையே இந்தியாவில் இதன் வெற்றியைத் தீர்மானிக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI