பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் மாடலில் 294சிசி திறன் கொண்ட இன்ஜின் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பஜாஜ் பல்சர்:


இந்தியாவை சேர்ந்த மல்டி நேஷனல் ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோரிக்‌ஷா போன்ற பல்வேறு வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட காலமாக செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்திற்கே புதிய அடையாளத்தை பெற்றுத் தந்த பெருமை, பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிளையே சேரும்.


அதன் ஸ்போர்ட்டி லுக் இளைஞர்கள் இடையே ஏற்படுத்திய தாக்கம், விற்பனையையும் பல மடங்கு உயர்த்தியது. இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பஜாஜ நிறுவன தலைமை செயல் அதிகாரியான ராஜீவ் பஜாஜ், ”இந்த நிதியாண்டில் மிகப் பெரிய பல்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போதுள்ள பல்சர் 250 வரம்பை விட இது பெரியதாக இருக்கும்” என கூறினார்.


எகிறும் எதிர்பார்ப்பு..!


இந்த புதிய பல்சர் பைக்கின் இன்ஜின் திறன் தொடர்பாக கேட்டபோது, ​​விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று ராஜீவ் பஜாஜ்தெரிவித்தார். இதையடுத்து புதிய பல்சர் டோமினார் 400 அல்லது புதிய கேடிஎம் டியூக் 390-ல் இடம்பெற்றுள்ள இன்ஜின் மூலம் இயக்கப்படலாம் என்று  வதந்திகள் பரவி வருகின்றன.


KTM வரம்பில் ஏற்கனவே காணப்பட்ட பல்சருடன் இதே அளவிலான இன்ஜின் சிசி மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. KTM 200 வெளியீட்டிற்குப் பிறகு பல்சர் 200 வந்தது. KTM 250 வெளியீட்டிற்குப் பிறகு பல்சர் 250 கிடைத்தது. தற்போது பல்சர் 400 கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


புதிய பல்சர் 300 வருகிறதா?


இந்நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வரும் மிகப் பெரிய  புதிய மாடல், பல்சர் 400 அல்ல பல்சர் 300 என்று தகவல்கள் தற்போது வெளியாக தொடங்கியுள்ளன. இதில் புதிய 294 சிசி இன்ஜின் இடம்பெற்றுள்ளது.  300-400சிசி மோட்டார்சைக்கிள் பிரிவு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதால், பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும் அந்த இடத்தை குறிவைத்துள்ளன. அந்த பிரிவில்  ஹார்லி-டேவிட்சன் X440,  ட்ரையம்ப் ஸ்பீட் 400  மற்றும் TVS நிறுவனத்தின் Apache RTR 310 அகியவை அந்த பிரிவை சேர்ந்தவையாகும். 


மாறாத நம்பிக்கை:


பல்சர் பைக்குகள் அவற்றின் ஸ்ட்ரீட் ப்ரெசன்ஸ் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுக்காக எப்போதும் கொண்டாடப்படுகின்றன.  புதிய 300சிசி பல்சரின் அணுகுமுறையும் பெரும்பாலும் அதே மாதிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.  மிகப்பெரிய பல்சர் என்பதால், சில கூடுதல் ஆற்றல் மற்றும் அம்சங்களை எதிர்பார்க்கலாம். பல்சர் 300 வடிவமைப்பு ஆக்ரோஷமானதாக இருக்கும்.


இது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புளூடூத் அடிப்படையிலான இணைப்பு செயல்பாடுகளை பெறும். பஜாஜ் USD முன் ஃபோர்க்குகளை சேர்க்கலாம், அதே சமயம் ஒரு மோனோஷாக் யூனிட் பின்புறத்தில் சஸ்பென்ஷனில் இடம்பெறும். இரண்டு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள், இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கலாம். மென்மையான டவுன்ஷிஃப்ட்களுக்கு, ஒரு ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படலாம். பல்சர் 300,  நகர வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையில் பல்துறை சவாரி நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்ஜின் விவரம்:


இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், புதிய 294cc இன்ஜின் அதிகபட்சமாக 30 PS ஆற்றலையும் 25 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.  6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். அதிகப்படியாக மணிக்கு 140 கிமீ வேகத்திற்கு மேல் பயணிக்கலாம்.  சுமார் 800 மிமீ இருக்கை உயரத்தைக் கொண்டிருக்கும்.


இது பல்வேறு சூழல்களில் மேம்பட்ட கட்டுப்பாடு மற்றும் கையாளுதலை உறுதி செய்யும் வகையில்,  போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும்.   சில லேசான ஆஃப்-ரோட் பயணத்தையும் அனுமதிக்கலாம். . பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டராக இருக்கலாம். தற்போதைய பல்சர் 250 ட்வின்கள் ரூ.1.50 லட்சம் எனும் ஆரம்ப விலையில் கிடைக்க்ன்றன.  அதே வேளையில், புதிய பல்சர் 300 விலை, இதை விட அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI