Car Mileage Fuel Efficiency: ஏசி பயன்பாடு மற்றும் ஏசி பயன்பாடு இல்லாத நிலைகளில் காரின் மைலேஜ் என்ன, என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அரசு பரிந்துரைத்துள்ளது.

Continues below advertisement

கார்களின் மைலேஜ் ஆய்வில் மாற்றம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் எரிபொருள் செயல்திறனை எப்படி அதிகாரப்பூர்வமாக ஆராய வேண்டும் என்பதற்கான, சில பரிந்துரைகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கியுள்ளது. அந்த வரைவு அறிவிப்பின்படி, இனி அனைத்து கார்களும் ஏசியை ஆன் செய்த நிலை மற்றும் ஆஃப் செய்த நிலை என இரண்டிலும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதனால், நிஜ உலக பயன்பாட்டில் உண்மையில் ஒரு கார் எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்பதை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அறிக்கையின்படி, ”வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான M1 வாகனங்களையும் (கார்களையும்), அவ்வப்போது திருத்தப்படும் AIS 213-விதியின்படி ஏசியை ஆன் செய்த நிலையில் எரிபொருள் செயல்திறனுக்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்” என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

Continues below advertisement

M1 வாகனங்கள் என்றால் என்ன?

M1 வகை வாகனங்கள் என்பவை ஓட்டுனர் உட்பட 8 பேர் வரை அமரும் வகையிலான பயணிகள் கார்களை குறிக்கிறது. இதில் ஹேட்ச்பேக், செடான்கள், எஸ்யுவிக்கள் மற்றும் எம்பிவிக்கள் ஆகியவையும் அடங்கும். இதில் கொண்டு வரப்படும் புதிய மாற்றத்தால், மைலேஜ் தொடர்பான போலி விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாறும் நிலை தவிர்க்கப்படும். சரியான தங்களது பயன்பாட்டிற்கு ஏதுவான காரை தேர்வு செய்யவும் பயனர்களுக்கு வழிவகுக்கும். வாடகைக்கு கார் ஓட்டுபவர்களுக்கு, காரின் மைலேஜ் அடிப்படையில் தான் வரவு என்பதே இறுதியாகிறது.

மைலேஜ் விதியில் புதிய மாற்றங்கள் ஏன்?

உலகளாவிய சோதனை விதிமுறைகளின்படி, தற்போதைய சூழலில் கார் உற்பத்தியாளர்கள் ஏசியை ஆஃப் செய்த நிலையில், காரின் மைலேஜை பரிசோதித்து அந்த விவரங்களை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வெளியிடுகின்றனர். ஆனால், பெரும்பாலும் அந்த விவரங்கள் நிஜ உலக பயன்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை. காரணம் சோதனையின்போது ஏசி பயன்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மைலேஜ் விவரங்கள் கணக்கிடப்படுகிறது. இது மைலேஜை மனதில் கொண்டு காரை வாங்கும் பயனர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைகிறது. அதற்கான தீர்வாகவே, புதிய விதிகளானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் நிஜ உலக பயன்பாட்டிற்கான காரின் எரிபொருள் செயல்திறனை சரியான புள்ளிவிவரங்களுடன் பிரதிபலிக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

அதன்படி, புதிய விதிகள் அமலுக்கு வந்தால் உற்பத்தியாளர்கள் தங்களது எரிபொருள் அல்லது மின்சாரம் சார்ந்த என அனைத்து வகையான கார்களையும், ஏசி ஆன் செய்த மற்றும் ஆஃப் செய்த என இரண்டு நிலையிலும் மைலேஜ் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதனை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தளத்திலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

AIS 213-விதி என்றால் என்ன?

மத்திய அரசு வழங்கியுள்ள வரைவு அறிவிப்பின்படி, AIS-213 இன் படி சோதனை நடத்தப்படும். இது M1 வகையைச் சேர்ந்த அனைத்து வாகனங்களிலும் ஏசி-யை ஆன் செய்த நிலையில்,  உமிழ்வு மற்றும் எரிபொருள் பயன்பாட்டை அளவிடுவதற்கான நடைமுறைக்கு வழிவகுக்கும். AIS-213, ஏசி அமைப்பின் கூடுதல் சுமையையும், எரிபொருள் பயன்பாடு மற்றும் உமிழ்வுகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கணக்கிட வடிவமைக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI