Mitsubishi Pajero: மிட்சுபிஷியின் புதிய பஜேரோ கார் வழக்கமான பாடி ஆன் ஃப்ரேம் முறையில் கட்டமைக்கப்பட உள்ளதாம்.

Continues below advertisement

முற்றிலும் புதிய மிட்சுபிஷி பஜேரோ 

மிட்சுபிஷி நிறுவனமானது தனது முற்றிலும் புதிய ஆஃப்-ரோடர் எஸ்யுவி கார் மாடல் மூலம், சர்வதேச எஸ்யுவி சந்தையில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. 2026ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய காரானது பஜேரோவின் மீள் உருவாக்கமாக இருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ஜப்பானிய நிறுவனம் அறிவிக்காவிட்டாலும், புதிய மாடல் தொடர்பான குறிப்பில் “உண்மையான க்ராஸ் கண்ட்ரி எஸ்யுவி” என விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காலத்தில் அந்த ப்ராண்டின் அடையாளமாக திழந்த எத்தகைய சாலைகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட பஜேரோவின் கம்பேக்கையே உணர்த்துவதாக புரிந்துகொள்ள முடிகிறது.

Continues below advertisement

பாடி ஆன் ஃப்ரேம் எஸ்யுவி

பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் மோனோகாக் ப்ளாட்ஃபார்ம்களுக்கு மாறிவிட்ட நிலையில், மிட்சுபிஷியின் புதிய எஸ்யுவி ஆனது பாரம்பரியமான பாடி ஆன் ஃப்ரேம் ப்ளாட்ஃபார்மிலேயே கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடித்தளமானது ப்ராண்டின் புதிய பிக்-அப் வாகனமான ட்ரைட்டன் உடன் பகிரப்படும் என கூறப்படுகிறது. அதன் மூலம், தீவிரமான ஆஃப்-ரோட் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட, மிகவும் நீடித்து உழைக்கக் கூடிய லேடர் ஃப்ரேம் சேஸிலிருந்து புதிய பஜேரோ பலனடைய உள்ளது. 

புதிய பஜேரோ - இன்ஜின் விவரங்கள்:

செயல்திறன் அடிப்படையில், இந்த எஸ்யுவியில் நன்கு பரிட்சயமான அதேநேரம் மேம்படுத்தப்பட்ட பவர்ட்ரெயின் விருப்பங்களை வழங்க மிட்சுபிஷி பரிசீலித்து வருகிறதாம். பிரதானமான ஆப்ஷனாக 2.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக ஒரு ப்ளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷன் குறிப்பிட்ட சந்தைகளில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் ஆஃப்-ரோட் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக, மேம்படுத்தப்பட்ட சூப்பர் செல்க்ட் ஃபோர் வீல் ட்ரைவ் சிஸ்டம் சேர்க்கப்படுகிறது.

புதிய பஜேரோவின் தோற்றம் எப்படி இருக்கும்?

புதிய பஜேரோவின் முன்பகுதியானது நிமிர்ந்த தோற்றத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, வலுவான க்ரில், செதுக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் பாடி க்ளாடிங் ஆகியவற்றுடன் கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்டிருக்குமாம். எல்இடி லைட்டிங் எலிமெண்ட்கள் மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாமாம். அம்சங்கள் அடிப்படையில் மிகப்பெரிய மேம்படுத்தலுக்கு வாய்ப்புள்ளதாகவும், அந்த பட்டியலில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளேக்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவற்றும் மேம்படுத்தப்பட்ட ADAS வசதியும் இருக்க வாய்ப்புள்ளதாம். 

புதிய பஜேரோவின் இடவசதி எப்படி?

மிட்சுபிஷியின் புதிய எஸ்யுவியில் விசாலமான இடவசதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைக்கு இந்த காரில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். அண்மைக்காலமாக உள்நாட்டு சந்தையில் இந்த ப்ராண்டின் செயல்பாடு என்பது மிகவும் கணிசமாகவே உள்ளது. குறிப்பாக புதிய கடுமையான உமிழ்வு விதிகளுக்குப் பிறகு நிறுவனத்தின் செயல்பாடு குறைந்தது. ஆனால், ஆஃப் ரோட் செயல்திறன் கொண்ட புதிய ஃப்ளாக்‌ஷீப் எஸ்யுவி சந்தைக்கு வரும் போது, நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மிகப்பெரிய அளவில் மாற்றம் பெறக்கூடும். 

மிட்சுபிஷியின் புதிய காரின் பெயர் மற்றும் வெளியிட்டு விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஒரு காலத்தில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த எஸ்யுவி பிரிவில் மீண்டும் பயணத்தை தொடங்க நிறுவனம் முனைப்பு காட்டுகிறது. இதற்காக பாரம்பரியம், திறன் மற்றும் நவீன பொறியியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான போட்டியாளரைத் தயார் செய்து வருகிறது. இந்த காரானது ப்ராண்டின் மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி ஆன பஜேரோவின் சாராம்சத்தை முற்றிலும் புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவரக்கூடும் என நம்பப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI