Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Kia UpComing SUV: முன்னணி கார் மாடல்களுக்கு போட்டியாக ஹைப்ரிட், 7 சீட்டர் மற்றும் மின்சார எடிஷன் என, அடுத்தடுத்து 4 வாகனங்களை அறிமுகப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Kia UpComing SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா சார்பில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 4 எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கியாவின் 4 எஸ்யுவி மாடல்கள்:
இந்திய சந்தைக்கான தங்களது போர்ட்ஃபோலியோவில், கார் மாடல்களின் எண்ணிக்கையை 2030ம் ஆண்டுக்குள் 10 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கியா அண்மையில் அறிவித்தது. அதில் 8 மாடல்கள் மின்சார வாகனங்களாக இருக்க உள்ளது. குறிப்பாக கியா சைரோஸ் மின்சார எடிஷன், கியா செல்டோஸ் ஹைப்ரிட் மற்றும் கியா சொரெண்டோ ஹைப்ரிட் ஆகிய 3 மாடல்கள் வரும் 2027ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுபோக புதிய தலைமுறை சோனெட் மாடலும் 2027ல் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஆனால், இதன் ஹைப்ரிட் எடிஷன் உடனடியாக சந்தைக்கு வர வாய்ப்பில்லையாம். இதனிடையே, மேற்குறிப்பிடப்பட்ட 4 வாகனங்களின் சாலை பரிசோதனையும் தீவிரமடைந்துள்ளது. அந்த மாடல்கள் தொடர்பாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. கியா சைரோஸ் மின்சார எடிஷன்
கியா சைரோஸ் EV வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இது இந்தியாவில் கியாவின் மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலை மின்சார மாடலாக இருக்கும். உள்ளூர் சந்தையில் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ளும். இந்த மின்சார மாடல், இன்ஜின் எடிஷனை போன்றே அதன் தனித்துவமான பாக்ஸி போன்ற வடிவத்தையும் நிமிர்ந்த தோற்றத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும், ஏரோடைனமிக்ஸ் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட அலாய் வீல்கள், சார்ஜிங் ஃபிளாப்கள் மற்றும் EV-க்கென பிரத்யேகமான பல மாற்றங்களை கொண்டு வித்தியாசமான தோற்றத்தை பெறும். K1 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட கியா சைரோஸ் EV, சர்வதேச சந்தையில் 42kWh மற்றும் 49kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் விற்கப்படும் ஹூண்டாய் இன்ஸ்டர் EV-யின் பவர்டிரெய்னை இந்தியாவில் பின்பற்ற வாய்ப்புள்ளது. இதன் விலை உள்ளூரில் ரூ.14 லட்சத்தில் தொடங்கி ரூ.20 லட்சம் வரை நீள வாய்ப்புள்ளது.
2. கியா செல்டோஸ் ஹைப்ரிட்
கியா செல்டோஸ் ஹைப்ரிட் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என ப்ராண்டிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. பவர்ட்ரெய்ன் தொடர்பான விவரங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை என்றாலும், இந்த எஸ்யூவியில் தற்போதுள்ள 115bhp, 1.5L நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் மின்மயமாக்கப்பட்ட எடிஷன் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைப்ரிட் பேட்ஜிங்கைத் தவிர, செல்டோஸ் ஹைப்ரிட்டின் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் ஸ்டைலிங் மாற்றமின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 19 லட்சத்தில் தொடங்கி 25 லட்சம் வரை நீளக்கூடும். டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா ஆகியவற்றிடமிருந்து நேரடி போட்டிகளை எதிர்கொள்ளும்.
3. கியா சொரெண்டோ
உள்ளூரில் 7 சீட்டர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா சஃபாரி, மஹிந்திரா XUV 7XO மற்றும் ஹூண்டாய் அல்காசர் ஆகியவற்றுக்குப் போட்டியாக, ப்ரீமியம் மூன்று வரிசை இருக்கை எஸ்யூவியாக கியா சொரெண்டோ கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவிற்கான மாடலின் பவர்ட்ரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த எஸ்யூவி, வரவிருக்கும் செல்டோஸ் ஹைப்ரிட் மாடலுடன் தனது ஹைப்ரிட் பவர்ட்ரெய்னைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், சொரெண்டோ 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் பவர்ட்ரெய்னுடன், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது. ஐரோப்பிய மாடலில் AWD ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. உள்ளூரில் இதன் விலை 35 லட்சம் முதல் 48 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
4. புதிய தலைமுறை சோனெட்
QY2E என்ற கோட்நேமை கொண்ட இரண்டாம் தலைமுறை கியா சோனெட் , 2027-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சப்-காம்பாக்ட் எஸ்யுவி சைரோஸ் காருக்கும் அடிப்படையாக உள்ள புதிய K1 ப்ளாட்ஃபார்மிற்கு மாறுகிறது. K1 ப்ளாட்ஃபார்ம் சமீபத்திய எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (E&E) ஆர்கிடெக்ட்சரை ஆதரிப்பதால், புதிய சோனெட்டில் ஓவர் தி ஏர் அப்டேட்கள் மற்றும் ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள 83bhp, 1.2L பெட்ரோல், 120bhp, 1.0L டர்போ பெட்ரோல் மற்றும் 116bhp, 1.5L டீசல் இன்ஜின் தேர்வுகள் அப்படியே தொடரும். மேலும், 2028 அல்லது 2029-ல் சோனெட் லைன் - அப்பிற்கு ஒரு புதிய சக்திவாய்ந்த ஹைப்ரிட் பவர்டிரெய்ன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























