Upcoming Compact Electric SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள 4 காம்பேக்ட் மின்சார எஸ்யுவிக்கள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
காம்பேக்ட் மின்சார எஸ்யுவிக்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் மின்சார எஸ்யுவிக்கள் பிரிவு ஆப்ஷன்கள் நிறைந்ததாக மாற உள்ளது. அதற்கேற்றப்படி பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது புது மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த தேதி குறித்துள்ள்னர். மலிவு விலை, நடைமுறைக்கு உகந்தது மற்றும் நல்ல ரேஞ்ச் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய, லோயட் எண்ட் மின்சார வாகன பகுதியை குறிவைத்து புதிய கார்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக டாடா, மஹிந்திரா, கியா மற்றும் ஹுண்டாய் ஆகிய கார் மாடல்கள் இந்த பிரிவில் தங்களது புதிய கார்களை களமிறக்க உள்ளனர்.
1. மஹிந்திரா XUV 3XO EV
மஹிந்திரா தனது அடுத்த மின்சார காராக தயார்படுத்தி வரும், XUV 3XO கார் சாலை சோதனையின் போது பல முறை சிக்கியுள்ளது. இதன் மூலம் இந்த கார் கூடிய விரைவிலேயே சந்தைப்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது. நிறுவனத்தின் மின்சார வாகன போர்ட்ஃபோலியோவில், XUV400 கார் மாடலுக்கு கீழே புதிய கார் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காரில் உள்ள பேட்டரி பேக் மற்றும் பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரும் என்றும் கூறப்படுகிறது. காரின் ஒட்டுமொத்த அமைப்பானது இன்ஜின் அடிப்படையிலான XUV 300 போலவே இருந்தாலும், மின்சார வாகனத்தை தனித்துவப்படுத்தும் வகையில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில சிறிய திருத்தங்கள் இருக்கக் கூடும். சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்போது, டாடா பஞ்ச், நெக்ஸான் ஆகிய மின்சார கார் மாடல்களுக்கு போட்டியிடும். சுமார் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என நம்பப்படும் இந்த காரின் விலை, சுமார் 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
2. ஹுண்டாய் இன்ஸ்டர் அடிப்படையிலான கார்
ஹுண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்கு பல்வேறு மின்சார கார் மாடல்களை தயார்படுத்தி வருகிறது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் இன்ஸ்டெர் காம்பேக்ட் எஸ்யுவி அடிப்படையிலான கார் முதலாவதாக சந்தைக்கு வரவுள்ளது. இன்ஸ்டெரின் மின்சார எடிஷன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் சோதனையின்போது காணப்பட்டாலும், இந்தியாவிற்கு வரும்போது அதற்கேற்ப சில மாற்றங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டு பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படும் இந்த கார், டாடா பஞ்சிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும். இதன் தொடக்க விலை சுமார் ரூ.12 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம்.
3. கியா சைரோஸ் எலெக்ட்ரிக்
இந்திய சந்தையில் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையில் அண்மையில் களமிறங்கி கவனத்தை ஈர்த்த, சைரோஸ் கார் மாடல் அடுத்த ஆண்டில் மின்சார எடிஷனில் உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள காரென்ஸ் கிளாவிஸ் மின்சார காரின் அடிப்படையிலேயே புதிய கார் உருவாக்கப்படும் என தெரிகிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV400 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக செயல்பட உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், குறைந்தபட்சம் 480 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கார், 14 முதல் 20 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
4. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடலாக உள்ள பஞ்சிற்கு, மிட்-லைஃப் அப்டேட்கள் தயாராகி வருகின்றன. புதிய ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எடிஷனானது அடுத்த ஆண்டு முதல் பாதியில் சந்தைப்படுத்தப்படலாம். அப்டேட்டட் வெர்ஷனானது, டாடாவின் புதிய கார் மாடல்களில் உள்ள சில அம்சங்களை பெறக்கூடும். தோற்ற மேம்பாடுகள் மட்டுமின்றி, தொழில்நுட்ப அம்சங்களின் அப்கிரேட்கள் மற்றும் ஓட்டுனர் வரம்பு நீட்டிப்பு ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எடிஷனின் விலை ரூ.10 லட்சமாக உள்ள சூழலில், புதிய வெர்ஷனின் விலை சுமார் 50 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI