திருச்சியில் புகழ்வாய்ந்த சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி மாநகரின் காவல் தெய்வமாகவும் விளங்குபவள் உறையூர் வெக்காளியம்மன். வானமே கூரையாக கொண்டு, வெயில், மழை  பனி, காற்று என்று அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களின் தீராவினைகளை தீர்ப்பவள் வெக்காளி. இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. புதிய கருங்கற்களால் ஆன அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம் விமானங்களை பழுது நீக்கி புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிவுற்றுள்ளன. அதையடுத்து, சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக, கடந்த  சனிக்கிழமை கணபதி ஹோமம் நடைபெற்று, அய்யாளம்மன் படித்துறையிலிருந்து மேள, தாளங்கள் முழங்க காவிரியிலிருந்து குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கோவில் பூசாரி அமர்ந்து புனிதநீர் குடத்தை கொண்டு வர, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீர் குடங்களை தலையில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.




மேலும் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி, அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாகச்சாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை, 6.45 மணிக்கு மேல் தொடங்கி 7.25 மணிக்குள், ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளட்ட பலர் பங்கேற்றனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 




பின்னர் காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்தி விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன், மூலவ மூர்த்திகளின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக பொதுமக்களுக்கு ஒளிபெருக்கி மூலம் காவல்த்துறையினர்  கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியம் வேண்டும் என்று தெரிவித்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண