பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்றும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழா  இன்று தொடங்கி பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 10ம் நாள் அன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.


இன்று அதிகாலை திருக்கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 06.00 மணியளவில் தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் சந்நதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தின் அருகில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்;கள் சரிசனம் செய்தனர்.
கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


 




பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு 
நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி, 
வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு 
மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள், ஆனால் தற்போது கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இந்து அறநிலை துறை சார்பாக  திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.


தட்சிணாயின புண்ணிய கால சிறப்பு பற்றி சிவாச்சாரியாரிடம் இது குறித்து கேட்ட போது, 


‛‛அண்ணாமலையார் கோவிலில் வருடத்தில் நாங்குமுறை நடைபெறும் தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம் , ஆடிபுரம் என கொடியேற்றம் நடைபெறும். அதில் ஒன்றான  தட்சிணாயின புண்ணியகாலம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைப்பெற்றும் மற்றும் தீப ஆராதனைகளும் செய்யப்பட்டன. பத்துநாட்கள் நடைபெறும் இந்த ஆண்டில் ஆணி திருமஞ்சன சேர்ந்து வருகிறது இந்த ஆண்டின் சிறப்பம்சம் ஆகும்.




ஆண்டு தோறும் ஆணி திருமஞ்சனத்தன்று நடராஜர் வீதி உலா வருவது சிறப்பு. ஆனால்  இந்த ஆண்டு இந்த பத்துநாட்கள் திருவிழாவில் முடிவதற்குள் நடராஜர் வீதி உலா வருவது மிக சிறப்பாக உள்ளது எனவும். சகல ஜிவ ராசிகளும் இன்புற்று வாழ மற்றும கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள அண்ணாமலையாரை பிரார்த்தனை செய்து கொள்வோம்,’’ என தெரிவித்தார்