மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி


விழுப்புரம் : திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலத்தில் மலை மேல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன், பழ வகைகள், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.


ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான நேற்று ரோஜா மலர்களால், செவ்வாடை பட்டு உடுத்தி ஆறு கரங்களுடன் வெள்ளி கவசத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உடன் வீரபாகு தேவர் வெள்ளிக் கவசத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.




ஷோடச உபசார பூஜைகள்


பல்வேறு வகையான தீபாராதனைகள் மற்றும் பஞ்சமுக தீபம் காண்பிக்கப்பட்டது. ஷோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஆறுமுகசாமி வள்ளி தெய்வானை சமேதராகவும், வீரபாகு தேவர் ஆகிய சுவாமிகள் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஆறுமுக சுவாமி முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடத்திக் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரம்


தொடர்ந்து, 18ம் தேதியான நேற்று கந்தசஷ்டி விழாவையொட்டி, இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்குதலும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரமும் நடந்தது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கிரிவலம் நடைபெற்றது. 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.




சஷ்டி பெருவிழா


முருகனுக்கு உகந்த தினங்களில் மிக முக்கியமானது கந்த சஷ்டி பெருவிழா. ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்குப் பின், வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி திதி வரையிலான இந்த 6 தினங்களும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும். முருகன் சூரனை அழித்ததை கொண்டாடும் வகையில் இந்த நாளான கொண்டாடப்படுகிறது.தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடு இருந்தாலும் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கொண்டாடப்படும் சஷ்டி விழா மிகவும் பிரசித்திப் பெற்றது. 


அதன்படி கடந்த நவம்பர் 13 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தங்கதேரில் ஜெயந்தி நாதர் எழுந்தருளுதல், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு, சண்முக விலாசம் சேர்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. 




சூரசம்ஹாரம் 


இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான நவம்பர் 18 சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறும் நிகழ்வில் முருகப்பெருமான சூரபத்மனை வதம் செய்யும் சம்பவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண தமிழ்நாடு முழுவதும்  மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூருக்கு வருகை தந்து விரதம் இருந்து வந்தனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 






 

பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, இருவரும் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து நாளை திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது.