மதுரையிலிருந்து இராஜபாளையம் , குற்றாலம் செல்லும் சாலையில் சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எம்.சுப்புலாபுரம் என்ற ஊர். இங்கிருந்து கிழக்கே சுமார் 2 அரை கிலோ மீட்டரில் நேரக்கோயிலான 'ஸ்ரீகால தேவி' கோயில் அமைந்துள்ளது. வயல்வெளிகளுக்கு இடையே அமைந்திருக்கும் இந்த கோயில் கோபுரம் நீண்ட கூம்பு வடிவ கோபுரமாக உள்ளது. கோபுரத்தில் மற்ற கோயில்களை போல் சிலை வடிவங்கள் இருக்காது . மிக குறைந்த அளவில் சிறிய, சிறிய வேலைபாடுகளை கொண்டு சற்று வித்தியாசமாக காட்சியளித்தது. கோயில் கருவரை முறம் வடிவில் இருப்பதால் நெல்லின் தூசிகளை நீக்குவது போல கெட்டது எல்லாம் ஒன்று கூடி விலகி விடுகிறதாம். பக்தர்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என விரும்பிய சாமிதாசன் என்று அழைக்கப்படும் சின்னசாமி, கோயிலை கட்டியுள்ளார். தொடர் ஆன்மீக ஈடுபாட்டிற்கு பின் இருபது, 30 ஆண்டுகள் கழித்து கோயில் கட்ட முடிவு செய்துள்ளார். ஒருவழியாக 2016-ல் இந்த கோயில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
கோயில் மாலை 6 முதல் காலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். பகல் நேரங்களில் நடை திறந்திருக்காது, பூஜைகள் நடைபெறாது. இரவு நேரங்களில் தவறுகள் அதிக அளவில் நடைபெறுவதால் தேவி தன் சக்தியை இரவு நேரங்களில் வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கோயிலில் தேவிக்கு வலது புறம் 11 சுற்றும், இடது புறம் 11 சுற்றும் சுற்றிய பிறகு பூஜை நேரத்தில் கால சக்கரத்தில் நின்று தேவியை பார்க்கும் போது, இடது கால் பாதத்தின் வழியாக கீழே கெட்டது நீங்கி வலது பாதத்தின் வழியாக நல்ல விசை ஏறி நெற்றி பொட்டில் நிற்குமாம். மாசி பெளர்ணமி அன்று வருடாபிஹேகம் நடைபெறும் அன்று தேவிக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் இது தொடர்பா நம்மிடம் பேசிய ஸ்வாமிதாசன் கூறுகையில்....," கோயிலில் அமாவாசை , பெளர்ணமி அன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அந்த நாட்கள் நமக்கு காலச் சக்கர பலன் கிடைக்கும். 3 பெளர்ணமி , 3 அமாவாசை வேண்டிக் கொண்டால் நாம் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும்.
அந்த நாட்களில் காலசக்கரத்தின் வேகம் அதிகமாக இருக்கும். நாம் முறையாக வேண்டுதல்களை நிறைவேற்றினால் விரைவாக பலன்கிடைக்கும். காலசக்கரத்தில் அனைவரின் பெயரின் முதல் எழுத்தும் அடங்கி இருக்கும். அதனால் எல்லோரின் நேரத்தையும் மாற்றி அமைக்க தேவி உதவுகிறாள். காலசக்கரம் இரவில் தான் வேலை செய்யும். அதனால் தான் இரவு நேரத்தில் மட்டும் இந்த கோயில் திறந்துள்ளது. மனிதனுக்கு நேரம் தான் முக்கியம் அந்த நேரத்தையே நல்லபடியாக மாற்றி அமைக்கிறாள் தேவி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேவியின் சக்தியை தேடி அழைந்த எனக்கு இங்கு தான் அதன் முக்தி கிடைத்தது.
அதனால் தான் இந்த கோயிலை இங்கேயே உருவாக்கி விட்டேன். இதன் சக்தி முதலில் என் குடும்பத்திற்கு தான் கிடைத்தது. பக்கத்தில் இருந்த மக்கள் இதனை உணர்ந்ததால் அவர்களும் வேண்ட ஆரம்பித்துவிட்டனர். அப்படியே இந்த கோயிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து வர ஆரம்பித்துவிட்டனர் . புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி அவர்கள் கூட வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றார். இயக்குநர் சமுத்திர கனி உள்ளிட்ட சினிமா துறையினர் கூட அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஸ்ரீ காலதேவி நேரத்தின் அதிபதி . காலசக்கரத்தை இயக்குபவளும் இவளே. இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. நேரத்தையை ஆளுகின்ற சக்தி தான் காலநாயகி ஸ்ரீ காலதேவி . கால நேரம் சரியில்லாத யாவரும் இங்கு வேண்டினால் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. சாதி, மத வேறு பாடின்றி இந்த கோயிலுக்கு அனைவரும் வரலாம்" என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இந்தியா முழுக்க '501' கோயில்கள் : யாத்திரை அனுபவம் சொல்லும் சகோதரர்கள்.. !