நம்முடைய அவசியங்களைப் பற்றி யோசிப்பதை விட, 17-ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியைத்தான் அனைவரும் அதிகம் யோசிக்கிறார்கள். நமக்கு சாதகமா, பாதகமா என்பதுதான் மிகப்பெரிய பட்டிமன்ற பேச்சு.
நமது செல்போனைப்பார்த்தால், மீன ராசிக்கு ஏழரை சனியால் ஒருத்தர் நல்லது என்கிறார், மற்றொரு ஜோதிடர் கெடுதல் என்கிறார். மற்றொருவர் கவனம் தேவை என்கிறார். இன்னொருவர் விபரீத ராஜயோகம் வரப்போகிறது என்கிறார். ஒரே ராசிக்கு இத்தனை பலன்களும் வருமா என்ற சந்தேகமும் கேள்வியும் நம்மை ஆட்டுவிக்க தொடங்குகிறது. இதனால், மனக் கிலி ஏற்படுகிறது என்பது மட்டும்தான் உண்மை. பெயர்ச்சியால் என்ன நடக்கும் என்பதைத்தான் இந்தக் கட்டுரை அணுகுகிறது.
சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?
நமது ஜாதக கட்டத்தில், சந்திரன் இருக்கின்ற ராசியை ஜென்ம ராசி என்போம். ஜென்மராசி, அதன் முன்னும் பின்னும் உள்ள ராசிகள் ஏழரை சனியின் பிடியில் இருக்கும் என்கிறது ஜோதிடம். அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2023-ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சனி பகவான் மகர ராசியில் இருக்கும் அனுஷம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் இருக்கும் அனுஷம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். அதுவும் தன்னுடைய சொந்த ராசியான மகரத்திலிருந்து, மற்றொரு சொந்த ராசியான கும்பத்தில் ஆட்சி அதிபதியாக செல்கிறார். 17-ம்தேதி பெயர்ச்சியிவ், ஜென்மராசி படி, கும்பத்தில் நிற்கிறது சனி. அதாவது, கும்பத்திற்கு பின் உள்ள மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் பாகமாக விரய சனி தொடங்குகிறது. கும்ப ராசிக்கு நடந்து வரும் ஏழரை சனியின் 2-வது பாகமாக இரண்டரை ஆண்டு கால ஜென்மசனி தொடங்குகிறது. அதேபோல், கும்பத்திற்கு முன் உள்ள மகர ராசிக்கு, ஏழரை சனியின் 3-ம் பாகம், அதாவது பாத சனி தொடங்குகிறது.
சனியின் ஆதிக்கத்தில் வரும் 6 ராசிகள்:
ஏழரை சனி தொடங்கும் மீனம், ஏற்கெனவே நடைபெறும் மகரம், கும்பம் ராசிகளுக்கு ஏழரை சனி என்றால் மேலும் மூன்று ராசிகளுக்கும் சனி பகவானின் ஆதிக்கத்தின்கீழ் வருகிறார்கள். அதன்படி, கும்பத்தில் ஜென்மசனி இருப்பதால், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் வருகிறது. எனவே, மீனம், மகரம், கும்பம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய 6 ராசிகள் சனியின் பார்வையின்கீழ் உள்ளனர். மற்ற ராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம், தனுசு, துலாம், கன்னி ஆகிய ராசிகள், சனியின் பார்வையில் இல்லை. எனவே, இந்த ராசிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் யோகக் காலம் தொடக்கம் எனவும் பல ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
உண்மையில் சனி பகவான் என்ன செய்வார்?
ஆயுள் காரகன், கர்ம காரகன், ஈஸ்வரன் பட்டத்துடன் சனீஸ்வரன் என்று அழைக்கப்படும் சனி பகவானைப் போல், கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை எனப் பலரும் கூறுவர். சனிப்பெயர்ச்சி குறித்து ஏதேதோ கூறி, பலரிடமும் குறிப்பாக ஏழரைசனி வரும் மூன்று ராசிகாரர்களுக்கு இது நடக்கும், அது நடக்கும் என பயமுறுத்தும் வேலையைத்தான் பெரும்பாலான ஜோதிடர்கள், பக்கம் பக்கமாக பத்திரிகைகளிலும், யூ ட்யூப் மூலமாகவும் செய்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே உண்மையைச் சொல்கின்றனர். ஆனால், அவர்களை அடையாளம் காண்பது வெகுஜனத்திற்கு மிகவும் கடினம். எனவேதான், உண்மை நிலவரம் என்ன? ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன? என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தால், சனி பகவான் மட்டுமல்ல, நவக் கிரகங்களும் நன்மையை மட்டும்தான் செய்கின்றன என்பது தெளிவாகிறது. நாம் என்ன செய்கிறமோ, அதன் விளைவுகளைத்தான் நவக்கிரகங்களும் நமக்கு திருப்பித் தருகின்றன என்பதுதான் ஜோதிட சாஸ்திரத்தின் கூறு. அது முற்பிறவி, கர்ம வினை என பலப் பல பெயர்களில் கூறப்பட்டாலும், நாம் எப்படி நமக்கு நெருக்கமானவர்கள், உற்றார், உறவினர், முன்பின் தெரியாதோர் ஆகியோரிடம் நடந்துக் கொள்கிறோம் என்பதன் எதிரொலிதான், நம்முடைய பலன்களாக வரும் என்பதுதான் கற்றறிந்தோரின் கூற்று.
ஏழரை சனி என்ன செய்யும்?
இதற்கு முன், ஏழரை சனி வந்தவர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், சனிப் பெயர்ச்சி வருவதற்கு முன் இருந்ததைவிட, ஏழரை சனி காலத்தில், பல நல்ல விடயங்கள், குறிப்பாக, தொழில்வளர்ச்சி, திருமணம், சிறந்த கல்வி, செல்வம் சேர்ப்பு என பல குறிப்பிடத்தக்க மைல்கற்களைச் சந்தித்து இருப்போம் என்பார்கள். ஆனால், அவரவர் செய்த பாவ காரியங்களுக்கு ஏற்ப, நோய், வீண் செலவு, ஏமாற்றம், இழப்பு போன்றவற்றையும் அனுபவித்து இருப்பார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி என பெயர்ச்சிகள் குறித்த அறிவிப்புகளும், கணிப்புகளும்தான் தேவையற்ற அச்சத்தையும், அதீத உணர்வையும் அனைவரிடத்தும் ஏற்படுத்துகின்றன. தவறு செய்தால் தண்டனை கிடைப்பதும், நல்லதுசெய்தால் நன்மை நடப்பதும் வாழ்க்கையின் நியதி. அதுவே விதி எனப்படுவது. எனவே, எந்தப்பெயர்ச்சியாக இருந்தாலும், அது சிறந்த பெயர்ச்சியே. ஏனெனில்,. நம்மை நாமே உணர்வதற்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும். நீங்கள் நல்லவராக, மற்றவர்களுக்கு எந்தத் துரோகமும், கெட்டதும் செய்யாமல் இருந்திருந்தால், எல்லா பெயர்ச்சியும் உங்களுக்கு நிச்சயம் யோகக் காலத்தைதான் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சனிப்பெயர்ச்சியும் உண்மையும்:
மேற்சொல்வதைப் பார்த்தவுடன், அப்படியென்றால் கிரகங்களின் பெயர்ச்சிகள் எல்லாம் கட்டுக்கதையா என்ற கேள்வி வரும். கிரகங்களின் பெயர்ச்சியும் அதன்தாக்கங்களும் 100 சதவீதம் உண்மை. ஆனால்,தற்போது சமூக வலைதளங்களில் கூவி, கூவி விற்பது போல் அல்ல என்பதுதான் யதார்த்தம்.
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சிகளின் போது, அந்த ராசிகளுக்கும் அதற்குரிய நட்சத்திரங்களுக்கும் நிச்சயம், அதன் ஈர்ப்பு சக்தி இருக்கும். காந்தம் அருகில் இருக்கும் போது ஏற்படும் சக்திக்கும் தொலைவில் இருக்கும் போது ஏற்படும் விளைவிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதேபோல்தான், கிரகங்களின் பெயர்ச்சிகள், அந்தந்த ராசிகளுக்கு வரும் போது, அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கம், அவரவர் செய்த செயல்களின் எதிரொலியாகத்தான் இருக்கும். எனவே, யாரும் தேவையின்றி கஷ்டம் வரப்போகிறது என பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. யோகம் வரப்போகிறது என தலையில் வைத்துக்கொண்டு கொண்டாட வேண்டிய தேவையுமில்லை என்பதுதான் பெரும்பாலானோருக்கு பொருந்தி வரும். உங்களுக்கு விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது. பணம் வந்து கொட்டப்போகிறது என்பார்கள். ஆனால், மாதக் கடைசியில் கடன் வாங்கும்போதுதான், அவனது யோகத்தை அவன் பார்த்துச் சிரித்துக் கொள்வான். அதேபோல், ஏழரை சனியால் காணாமல் போய்விடுவார் என்பார்கள். அவன் தொழிலதிபராக வந்து இருப்பான். எனவே, இவை அனைத்துமே நமது செயல்களின் எதிரொலிதான் என்பது என் அசைக்க முடியாத கருத்து. அதுவே யதார்த்த உண்மையாகவும் பலருக்கும் இருக்கும்.
பரிகாரங்கள் என்ன?
ஏழரை சனி நடக்கும் மீனம், மகரம், கும்பம் ராசிகாரர்களும், அஷ்டம சனி நடக்கும் கடக ராசியும், கண்டகச்சனி நடக்கும் சிம்ம ராசியும், அர்த்தாஷ்டம சனி நடக்கும் விருச்சிக ராசிகாரர்களும் யாகமெல்லாம் செய்ய வேண்டியதில்லை. சனிக்கிழமைதோறும் ஓம் சனீஸ்வராய நமஹ அல்லது சனீஸ்வர பகவானே போற்றி அல்லது சனீஸ்வரனே சரணம் ஆகிய மூன்று மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை, 108 முறை மனதிற்குள்ளேயே சொல்லி, ஒரு 5 நிமிட தியானம் செய்யுங்கள். அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய இரு தெய்வங்களையும் சனீஸ்வரைக் கட்டுப்படுத்தி, நற்பலனை அருளச் சொல்லுங்கள் என வேண்டிக் கொள்ளவும். அதுமட்டுமின்றி, மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். குறிப்பாக, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிச்செய்யுங்கள். கையில் காசு இருந்தால், ஒரு வேளை உணவு வாங்கிக்கொடுங்கள். யாருக்கும் துரோகம் செய்யாதீர்கள். இந்தப் பரிகாரங்களே போதுமானது. எந்தப்பெயர்ச்சியாலும் உங்களுக்கு வரும் துயர்கள் எல்லாம் பனித்துளி போல் நிமிடத்தில் கரைந்துவிடும் என்பது உறுதி.
சனிப்பெயர்ச்சி நடக்கும் ராசிக்காரர்கள் கவனத்திற்கு:
நல்லதுதானே செய்யரோம்னு உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற வம்புகளில் மாட்டிக்கொள்ளக்கூடாது. அவசரம், ஆத்திரம் இரண்டையும் தவிர்க்க வேண்டும். கவனம், கண்ணியும் இரண்டையும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியும், ஆதரவும் உங்களுடன் எப்போதும் இருக்கும். சனீஸ்வரன், ஆஞ்சநேயர், வினாயகர், அம்மா, அப்பா, வீட்டின் மூத்தோரை வணங்கி வாருங்கள். ஏழரைசனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்ட சனி, கண்டகச் சனி என எந்தச் சனியாக இருந்தாலும், உங்களுக்கு நல்லதே நடக்கும். நினைப்பே ஜெயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வளமும் நலமும் உங்கள் வசமாகட்டும்.