ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் பக்தர்களுக்கு அனுமதி என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த, தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கையை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வரும் செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வர அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்