தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வந்த நிலையில் அதனை தடுப்பதற்கு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கோவில் தளங்கள் சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. தற்போது கொரோனவைரஸ் பரவுதல் குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டும், நேர நிர்ணயம் அளிக்கப்பட்டு கடைகள் ,வர்த்தக நிறுவனங்கள் என இயங்குவதற்கு தளர்வுகள் கொடுக்கப் பட்டுள்ளன.  இந்நிலையில் கோவில்கள் திறப்பதற்கு தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் வரும் 5ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே முருகன் கோவிலில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. 




கோவிலில் தரிசனம் செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் கடை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன் வழிமுறைகள் என்னென்ன?


5ம் தேதி முதல் பக்தர்களின் நலன் கருதி இத்திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நினைவகத்தின் வழியாக சென்று படிபாதையை அடைந்து தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் செல்லும் வழியில் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


திருஆவினன்குடி திருக்கோயிலில் உள்ள ஒரு வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


சளி ,இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.


திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் முகக் கவசம் அணியாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளனர்.


இணையவழி முன்பதிவு அனுமதிச்சீட்டு உள்ள நபர்கள் மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இணையவழி பதிவு இல்லாதவர்கள் நேரில் வந்தால் இணையவழி பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


திருக்கோயிலின் மலைக்கோயிலில் ஒரு மணி நேரத்திற்கு1000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


இத்திருக்கோயிலின் இணையதள முகவரியான www.palanimurugan.hrce.tn.gov.in  வடிவான இந்த தளத்தில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்து இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் தங்களுக்கு தேவையான தேதியில் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இணையதள வசதி இல்லாத சாதாரண கைப்பேசி வைத்திருக்கும் பக்தர்கள் 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர், முகவரி ,தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு முந்தைய நாள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். மேற்படி முன்பதிவு கிராம பகுதிகளில் இருந்து அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். தினசரி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் முதலில் வரும் 200 அழைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பதிவின் வழியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.


இத்திருக்கோயிலில் 5.7.2021 ஆம் தேதி முதல் அபிஷேக பஞ்சாமிர்தம் மற்றும் முறுக்கு ,அதிரசம் ,லட்டு ,சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு மலைக்கோயிலில் பக்தர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வரும்.


விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் அனைத்தும் பேப்பர் கவர்கள் உடன் கொண்டு செல்லும் வகையில் வழங்கப்படுகிறது. பிரசாதங்களை திருக்கோயிலில் வளாகத்தில் அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.


பக்தர்கள் வழிப்பாதை மற்றும் யானை பாதையினை மட்டுமே பயன்படுத்தி மலை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


திருக்கோயில் திறக்கும் தேதியான 5.7.2021 தேதி முதல் மின் இழுவை ரயில் (Winch) இயக்கப்படும். கம்பிவட ஊர்தி (Roapecar) சேவையில்லை. மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்த பின்னர் கம்பி வட ஊர்தி (Roapecar)சேவை இயக்கப்படும்.



மலைக்கோயில் மற்றும் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் வரையப்பட்டுள்ள உரிய குறியீடுகளில் முறையாக நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும். தங்கரதம் மற்றும் தங்கத்தொட்டில் ஆகிய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் தேவஸ்தான முடிகாணிக்கை மண்டபத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் முடிகாணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் இருப்பிட விபரம் மற்றும் தொலைபேசி எண் தெரிவிக்கப்பட வேண்டும்.


சுவாமி தரிசனத்திற்கு நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்குள் வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது