ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.


ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி, கோயில் நடை நேற்று மலை திறக்கப்பட்டு, இன்று காலை முதல் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்களுக்கு கோயில் திறந்திருக்கும். சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கையை வழங்க வேண்டும்.


தினசரி அடிப்படையில் ஆன்லைன் முன்பதிவு  மூலம், அதிகபட்சம் 5,000 பக்தர்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.






 


 


கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே, பினராயி விஜயனின் அரசு மற்ற அனைத்து முக்கிய கோயில்களையும் மூடுமாறு உத்தரவிட்டது. கேரளாவில் நேற்று 13,750 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 130 பேர் மரணமடைந்தனர்.


 






மாநிலத்தில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், கொரோனாவை பாதிப்புகளை குறைக்கும் முயற்சியில் கேரளாவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், திருவனந்தபுரம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.