தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம்தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன், நெய் , திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, நாணயத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட, பிறகு வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, நெய் தீப ஆலாத்தியுடன், பஞ்ச கற்பூர ஆலாத்தி மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் உற்சவருக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு சோடச உபசாரங்கள் நடைபெற்ற பிறகு கும்ப ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ஆலயத்தின் ஓதுவார் செங்கோலுடன் முன்செல்ல மேளதாளங்கள் முழங்க சிவபக்தர்கள் ரிஷப வாகனத்தில் கொலுவிருந்த சுவாமியை தோள் மீது சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர். ஆலயம் வலம் வந்த பின்னர் கொடிமரம் அருகே சுவாமியை மூன்று முறை வலம் வந்த பிறகு பின்னர் மீண்டும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது அதைத் தொடர்ந்து மீண்டும் சுவாமி ஆலயம் குடிபுகுந்தார். ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாதப் பிரதோஷம் விழாவை முன்னிட்டு நந்தி பகவானின் சிறப்பு அபிஷேகத்தை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் செயல் அலுவலர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் ஆலயம் சென்று வழிபடலாம் என பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு கடந்த வாரத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதனை பல்வேறு ஆன்மீக பக்தர்களும் வரவேற்றுள்ள நிலையில் ஐப்பசிமாத பிரதோஷ விழாவிற்கு ஏராளமான மக்கள் கூட்டம் ஆலயம் வருகை தந்து நந்தி பகவானை தரிசனம் செய்தனர் கடந்த பல்வேறு மாதங்களாக பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இந்த பிரதோஷம் மக்கள் அலை கடல் கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பல்வேறு பக்தர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள உங்க கவசங்களை அணியாமல் சுவாமி தரிசனம் செய்து வருவதால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆலய நிர்வாகம் இணைந்து பக்தர்கள் முகக்கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.