தஞ்சாவூர் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை ஒரு கிராம மக்கள் பத்துநாட்கள் விரதம் இருந்து, தீயில் இறங்கி மிகுந்த பயபக்தியுடன் கொண்டாடி வருகின்றனர் என்பது ஒரு ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் மட்டுமின்றி, சமூக, சமுதாய, மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் அம்சமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.


தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையின் போது இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று காசவள நாடு புதூர் மக்கள் முகரம் பண்டிகை வழக்கம்போல் 10 நாட்கள் விரதம் இருந்து கொண்டாடினர்.




காசவளநாடு புதூர் கிராமத்தில்  நான்கைந்து தலைமுறையாக அல்லாவுக்கு விழா எடுக்கும் இந்துக்கள், இதற்காக பத்து நாளைக்கு முன்பாக ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்)  உள்ள “அல்லா சாமி” என்றழைக்கப்படும், கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, மொகரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதியுலா சென்று மறுநாள் காலையில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.


அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் கை உருவத்தை வெளியே எடுத்து வைத்தனர். தினமும் காலை, மாலை இருவேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.


அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் படையலிட்டனர். மேலும் மாலைகள் அணிவித்தும்  அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். நேற்று இரவு தொடங்கி காலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி சென்றது.


பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அங்கு தீமிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது அல்லா சாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர். இதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த காத்திருந்த ஏராளமானோர் தீயில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.


இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த ஆர்.ரவிச்சந்திரன் என்பவர் கூறியதாவது:  இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.




இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது இஸ்மியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். இதற்காக பத்து நாள் விரதமும் இருக்கிறோம்.


அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் "கரகம்"  எடுப்பது போல் அதற்கு பூக்களால் அலங்கரித்து, பட்டுத்துணிகளை போர்த்தி, இரவு முழுவதும் வீடு வீடாக சென்ற பின்னர், விடியற்காலையில் அல்லாவை வணங்கி, வேண்டுதலை நிறைவேற்ற தீமிதி இறங்குவோம் என்றார்.


இந்த விழா தஞ்சை மாவட்டத்தில் சமூக சமுதாய மற்றும் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரசியலில் ஆதாயம் தேட நினைப்பவர்கள் ஜாதி, மதம் ஆகியவற்றைக் காட்டி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். ஆனால் மக்கள் மனதில் அனைவரும் ஓரினம். எம்மதமும் சம்மதம் என்ற எண்ணம் எப்பொழுதும், ஒற்றுமையுடன் நிலைத்து நிற்கிறது என்பதற்கு இதுபோன்ற விழாக்களும் ஒரு முன்னுதாரணம் ஆகும் என்று சமூக ஆர்வலர்கள் தலைப்பில் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண