பஞ்சவடி கோயிலில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துடன், அனுமன் ஜெயந்தி மஹோத்சவ விழா ஜன.1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்பு பூஜைகள் இன்று தொடங்குகின்றன.  புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் திண்டிவனம் சாலையில் பாப்பாஞ்சாவடி என்ற ஊரில்பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது.


இந்தக் கோயில் வளாகத்தில் ஸ்ரீ மஹா கணபதிக்கும், பட்டாபிஷேக கோலத்தில் ராமருக்கும் தனித்தனி சந்நிதிகள்உள்ளன. கோயில் வளாகத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் 7.5 அடி உயரத்தில், 2 டன் எடையில் செய்யப்பட்ட வெங்கடாசலபதிக்கு தனி சந்நிதி எழுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



இங்கு, வரும் ஜன.1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு, 2-ம் தேதி அனுமன்ஜெயந்தி, 13-ம் தேதி வைகுண்டஏகாதசி நிகழ்வுகள் நடைபெறுகின் றன.  இதுகுறித்து பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா ட்ரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், கூடுதல் தலைவர் யுவராஜ், செயலாளர் நரசிம்மன் ஆகியோர் கூறிய தாவது:  உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், வரும் ஜன.1-ம் தேதி சனிக்கிழமை ஆங்கில புத்தாண்டு அன்று சொர்ண ராம பாதுகைக்கு சிறப்புஅர்ச்சனை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.  தொடர்ந்து ஜன.2-ம் தேதி காலை 8.30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால்அபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்களுடன் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. ஜன.13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நடை திறப்பு நடைபெறுகிறது. 


இதன் அங்கமாக அனுமன் ஜெயந்தி விழா இன்று (டிச.29) மாலை 6 மணிக்கு பகவத் ப்ரார்த்தனை, அனுக்ஞை, மஹா சங்கல்பம், ம்ருத்ஸங்கரணம், அங்குரார்ப்பணம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 2-ம் தேதி வரை தினமும் ஹோமங்கள், லட்சார்ச்சனை மற்றும் இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன.  2-ம் தேதி காலை 6 மணிக்கு பூஜைகள் புண்யாஹவாசனம், பஞ்சஸூக்தஹோமம், மூலமந்த்ரஹோமம் நடைபெறும்.



காலை 8.30 மணிக்கு விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. காலை 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்று, கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து திருமஞ்சனம் செய்யப்படும்.  காலை 10 மணியளவில் முத்தமிழ்ச் செல்வி, சொல்லரசி வாசுகி மனோகரனின் குழுவினரால் ‘ராமனும் அனுமனும்’ என்ற தலைப்பில் இசை சொற்பொழிவு நடைபெறும். 


12.30 மனியளவில் விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஷோடச உபசாரம், சாற்றுமுறை மற்றும் சிறப்பு திருவாரதனம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.  தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்து மக்கள் ஏராளமானோர் பஞ்சவடி அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் பங்கேற்று வருகின்றனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டாக்டர் என்.பழனியப்பன், வி.கச்சபேஸ்வரன், செல்வம், கே.வெங்கட்டராமன், ஆலய நிர்வாக அலுவலர் எ.பாலசுப்பிரமணியன், சிறப்பு அதிகாரி சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.