Guru Peyarchi 2022 Palangal: குரு பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த குருபெயர்ச்சியானது மனிதர்களின் வாழ்வில் இதுவரை நடந்து வந்த ஏற்ற, இறக்கங்களில் மாபெரும் மாறுதலை ஏற்படுத்த வல்லது. நடப்பாண்டிற்கான குருபெயர்ச்சி ஏப்ரல் 14ம் நாள் நடைபெற உள்ளது. பொன்னவன் எனப்படும் குருபகவான் கடந்த சில ஆண்டுகளாகவே அதிசாரம், வக்ரம், நேர்பயணம் என்று மூன்று ராசிகளில் பயணம் செய்தார். இனி குருபகவான் மீன ராசியில் சஞ்சரிக்கப்போகிறார்.


சனி பகவானின் சொந்த வீடான கும்ப ராசியில் இவ்வளவு நாள் பயணம் செய்த குருபகவான் தற்போது தனது சொந்த வீடான மீன ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஓராண்டு காலம் குருபகவான் மீன ராசியில் சஞ்சாரிப்பார். குருபகவான் மீனத்தில் அமர்ந்ததாலும், அவரது பார்வை படுவதாலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூடப்போகிறது.




மீன ராசிக்கு பயணம் செய்ய உள்ள குருபகவானின் பார்வை இந்த முறை கடக ராசி, கன்னி ராசி மற்றும் விருச்சிக ராசியினர் மீது பலமாக விழப்போகிறது. கடக ராசியின் மீது ஐந்தாம் பார்வையையும், கன்னி ராசி மீது ஏழாம் வீடான சமசப்தம பார்வையையும், விருச்சிக ராசி மீது ஒன்பதாம் பார்வையும் பார்க்கிறார் குருபகவான்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களுக்கு 10ம் வீட்டில் அமர்ந்துள்ள குருபகவான் இனி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால், ரிஷபத்திற்கு அதிர்ஷ்ட மழை என்றே கூறலாம். செய்யும் தொழிலில் லாபம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் இத்தனை நாட்கள் நீடித்து வந்த சிக்கல்கள் நீங்கும்.




ஜென்ம ராகுவும் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டதால் மனக்குழப்பங்கள் நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுவதால் முயற்சிகள் கைகூடும். திருமண யோகம் உண்டாகும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை உண்டாகும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக பயணித்த குருபகவான் இனி இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி குடும்ப குருவாக பயணம் செய்ய உள்ளார். இதனால். கும்ப ராசியினருக்கு வாழ்வே அற்புதமாக மாறப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். ராகுவின் பயணமும் சாதகமாக உள்ளதால் பல வழிகளில இருந்தும் பணம் வரும்.




பெண்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. பொன், பொருள், ஆபரணங்கள் வீடுகளில் குவியும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். மரணத்திற்கு இணையாக இருந்து வந்த கண்டங்கள் விலகும்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்த குருபகவான் இனி ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்ய உள்ளார். குருபகவானின் இந்த இடம் அற்புதமான இடம். அதேபோல, குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சலில் இத்தனை நாட்கள் தவித்து வந்த நீங்கள் நிம்மதியடைவீர்கள்.




மிகப்பெரிய அளவில் மனதிற்கு மகிழ்ச்சி கிட்டப்போகிறது. உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீடுகளின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சுபகாரியங்கள் நடைபெறும்.


கன்னி :


கவலையோடும், மன உளைச்சலோடும் இருந்த உங்களுக்கு சந்தோஷமும், மன நிம்மதியும் கிட்டப்போகிறது. வாழ்க்கையில் அளவிட முடியாத சந்தோஷம் உங்களுக்கு கிட்டும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ராகு, கேதுவின் பயணத்தாலும் உங்களின் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.




நீங்கள் ஏமாந்த பணம் மற்றும் பொருட்கள் உங்கள் இல்லம் தேடி வரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் செய்யும் தொழிலில் அளப்பரிய லாபம் கிட்டும்.


விருச்சிகம் :


செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் பயணிக்க உள்ளார். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை வந்து சேரும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.




உங்கள் ராசியின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால், குருவின் பார்வையால் கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. உங்கள் குறைகள் நீங்கி புதிய விடிவுகாலம் பிறக்கும். ஏழரை சனியால் பட்ட கஷ்டமும், ஜென்ம குருவினால் ஏற்பட்ட மனக்குழப்பங்களும் நீங்கப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம். பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. நன்மை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களின் உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியமடைவார்கள. ஆன்மீன பயணம் செல்லும் யோகம் உண்டாகும்.