திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது கன்னிவாடி அச்சம்பட்டி இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் மெய்கண்ட சித்தர் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்துதான் மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கம் ஆரம்பம். இதன் தோற்றம் பொதிகை மலையின் தோற்றத்தை போல் அமைந்திருக்கும் ,மேலும் மெய்கண்ட சித்தர் இந்த மலை கோவிலை வடிவமைத்ததாகவும் பின்னர் குண்டலினி சித்தர், வாமையானந்தர், முத்தாந்தர், ஆகியோர் இங்கு தவமிருந்து வழிபாடு செய்ததற்கு இங்குள்ள குகைகளே சான்றாகும் .



இவர்களுக்கு பின்னர் சீனப்பிரதேசத்தில் பெண் மோகத்தால் அனைத்து சக்திகளையும் இழந்து இருந்த போகரை அவரது சீடர் புலிப்பாணி தனது முதுகில் ஏற்றி வந்து இந்த தலத்தில் வைத்து இழந்த சக்திகளை மீட்டுத்தந்ததாகவும் கூறப்படுகிறது, தன்னுடைய சக்திகளை திரும்பப்பெற்றதை உலகறியச்செய்யவே  நவபாஷாணத்தால் ஆன சிலைகள் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பாக பழனி முருகள் கோயிலில் உள்ள நவபாஷாண சிலை இங்கு செய்யப்பட்டு மலை வழி மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டதற்கான குறிப்புகள் பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலை செய்ததற்காக பயன்படுத்திய உரல் இன்றும் இங்கு அழியாத அடையாளமாக திகழ்ந்து வருகின்றது.  மேலும் இந்த திருத்தலத்தை பற்றி பல நூல்களில் சித்தர்கள் வாழ்ந்த இடங்களின் குறிப்புகளும் இந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களின் குறிப்புகளும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக போகர் எழுதிய ஜெனனசாகரம், கருவூறார் பலதிரட்டு நூல்களில் கொங்கனரும் கருவூறாரும் கல்லை பொன்னாக்கிய திருத்தலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் கோரக்கர் எழுதிய சந்திர ரேகை எனும் நூலில் இந்த கோயிலில் காமதேனு பசு, ஆம்பல் குண்டம், நிர்வானமாக தவமிருக்கும் சித்தர், சித்தர் பருவதம், பொக்கிஷம் மலைபோல் மூடிய பாறை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அனைத்து உண்மை நிகழ்வுகளையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறார் இந்த கோயிலில் பரம்பரையாக பூசைகட்டி வரும் பூசாரி முருகானந்தம் .மேலும் இந்த கோவிலைபற்றிய சில தகவல்களும் அவர் கூறியதாவது,  காணக்கிடைக்காத ஓம்கார வடிவ விநாயகரும் விநாயகருக்கு முன் நந்தி அமைந்திருப்பதும் இங்குதான் எனவும் கூறினார். பின்பு சிவனே தன்னை வழிபடுவது போலாக சிவ லிங்கத்தின் முன் இருக்கக்கூடிய நந்தியின் கழுத்தில் சிவ லிங்கம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் நூல்களில் கூறப்பட்டது போல் குறியீடுகளையும் அதற்கான உண்மையையும் நமக்கு விளக்கிக் கூறினார். மேலும் போகர் நவபாஷாண சிலையை தனது சீடர்களுடன் பழனி மலைக்கு திருமஞ்சன பாதை வழியாக செல்வதாகவும் அதற்கான சான்று பழனி மலையிலும் உள்ளதாக அவர் கூறினார் . மலையின் வடிவம் மேல் பகுதி விஷ்னுவும் இடக்கையை வைத்து தலையை தாங்கியது போல் மகாலட்சுமியும் இருப்பதாகவும் இதனால் தான் இந்த மலையின் பெயர் அரிகேச பருவதம் என பெயர் பெற்றது என கூறி அதற்கான வடிவத்தையம் காண்பித்தார். இந்த கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சித்தர்கள் தற்போதும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதாகவும் கூறினார்.




குறிப்பாக இங்கு போகருக்கு தன் தவ வலிமை திரும்ப கிடைத்ததாலும் பல சித்தர்களின் மந்திரத்தால் பூஜிக்கப்பட்ட லிங்கம் இருப்பதாலும் சிவன், விஷ்னுவின் அனுக்கிரகம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது எனவும் கூறினார்.இங்கு சிவனும் ,விஷ்னுவும் அமைந்த மலை என்பதால் கோரக்கர் தனது நூலில் அம்மலையை அரிகேச பருவதம் என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனவும், இங்கு வருபவர்களுக்கு பூர்வ ஜென்ம தோசம் , கருமதோஷம் , முன்னோர்கள் சாபம் , குலதெய்வ தடை நீக்குதல் ,செய்வினை தாக்கு நிவர்த்தி , நவ கிரக தோச நிவர்த்தி ஆகும் என தெரிவித்தார் இந்த கோவிலின் பூசாரி.