கரூரில், ஆடி மாதம் முதல் நாளை வரவேற்கும் விதமாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை தொடரும் வகையிலும் தேங்காய் சுடும் விழாவை, ஆடி மாதம் 1-ஆம் நாள் தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி -18 அன்று முடிவுக்கு வருகின்ற விழாவைக் கொண்டாடினர்.
ஆற்றங்கரையில் தேங்காய்க்குள் கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய் என 5 வகையான பூரணங்கள் வைத்து அந்த தேங்காயை, தீயில் சுட்டு அதை அம்மனுக்கு படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர். தற்போதுள்ள கொரோனா நோயிலிருந்து விடுபட்டு பஞ்சமில்லாமல் வாழ பிரார்த்தனை செய்தனர். ஆண்டுதோறும் ஆடி மாதப் பிறப்பு என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது . இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடப்பது வழக்கம். கரூரில் குறிப்பாக ஆடி மாதப் பிறப்பு அன்று அமராவதி ஆற்றுப்படுகையில் தேங்காய் சுடும் வழிபாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டில் கரூர் படித்துறை அமராவதி ஆற்றுப்படுகையில் தேங்காய் சுடும் விநோத வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதற்காக தேங்காய்களை வாங்கி அதை சுத்தப்படுத்தி தேங்காயில் உள்ள மூன்று கண்ணில் ஒரு கண்ணில் துவாரமிட்டு, தண்ணீரை வெளியேற்றிவிட்டு அதன் வழியாக வெல்லம், பச்சரிசி, எள்ளு, உள்ளிட்ட பூரணத்தைப்போட்டு, தேங்காய் மீது மஞ்சள், குங்குமம் பூசி அந்த துவாரத்தில் நீளமான குச்சியைக் கொண்டு சொருகி, பின்னர் தீயிலிட்டு தேங்காயை நன்றாகச் சுட்டு அம்மனுக்கு வழிபாடுசெய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பெண்கள் காலை முதலே தேங்காய் சுடும் நிகழ்வுக்கு தயாரான நிலையில், அதற்கு தேவையான பொருட்களை வாங்கிவைத்த பின்னர் இன்று மாலை சிறப்பான முறையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்காய் சுடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் அதிக அளவு பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை வைத்து வருகின்றனர். பின்னர் அருகில் உள்ள விநாயகர் மற்றும் அம்மன் ஆலயங்களில் வைத்து வழிபட்ட பிறகு மீண்டும் இல்லம் வந்த பிறகு தேங்காய் உடைத்து அனைவரும் சுவைத்து மகிழ்வார்கள்.
மணமக்களாக இருந்தால், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் நீராடி தாலி கயிற்றுக்கு மஞ்சள் பூசி பிரத்யேக வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக பல்வேறு தரப்பினரும் கூறப்பட்டு வருகின்றன. ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த மாதம் தொடர்ந்து நடைபெறும். அதேபோல் இந்த மாதத்தில் ஆண் தெய்வங்களுக்கு அசைவ விருந்து படைத்து தங்களது தொழில் விருத்தி அடைய பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் நேர்த்திக்கடனை ஆண்டுதோறும் செய்து வருவதும் வழக்கம் .