தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கடந்த 5- தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து காணிக்கைகளை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கோவிலில்  உண்டியல் காணிக்கை என்னும் பணி கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றது. கோவில் இணை ஆணையர்  அன்புமணி  தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி  உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில்  கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூ.2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 635 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூ 1 லட்சத்து 54 ஆயிரத்து 758 ரூபாயும், யானை பராமரிப்பு  உண்டியிலில் 30 ஆயிரத்து 105 ரூபாயும், அன்னதான உண்டியலில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 866 ரூபாய் என கடந்த 20-நாட்களில் மட்டும் ரூ 2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 44 ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். மேலும்  2, 255 கிராம் தங்கமும் , 16 ஆயிரத்து 27 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இம்மாதம் 5-ந் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஜூலை மாதம் உண்டியல்கள் எண்ணப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.