ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.
பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆகும். குறிப்பாக, ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடே தர்ப்பணம் ஆகும். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யலாம். ஆடி அமாவாசை செய்யப்படும் தர்ப்பணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தர்ப்பணம் செய்த பிறகு முன்னோர்களுக்கு படையலிட வேண்டும். அதேபோல, பசுமாட்டிற்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது இன்னும் சிறப்பு ஆகும்.
நாளை ஆடி அமாவாசை
இந்த சூழலில், நடப்பாண்டிற்கான ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4ம் தேதி வருகிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, ஆடி அமாவாசை நாளை வருகிறது. அமாவாசை திதி இன்று மாலை 4.56 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.32 வரை வருகிறது. ஒரு நாளில் சூரிய உதயத்தின்போது எந்த திதி உள்ளதோ, அந்த திதியே கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில், நாளை ( ஆகஸ்ட் 4ம் தேதி) சூரிய உதயத்தின்போதே அமாவாசை திதி வருகிறது. அதன் காரணமாகவே ஆடி அமாவாசை நாளை வருகிறது.
தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது?
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதையடுத்து, நாளை எப்போது தர்ப்பணம் கொடுக்கலாம்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் ஆடி அமாவாசை நாளில் காலை 6 மணி முதல் காலை 11.55 மணி வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.
ஆடி அமாவாசையான நாளை மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை எமகண்ட நேரம் ஆகும். இதனால், அந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆடி அமாவாசை நன்னாளில் காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில், நீர்நிலைகளில் தர்ப்பணம் வழங்குவது வழக்கம்.