தூத்துக்குடி: சாயர்புரம் பகுதியில் மஞ்சள் அறுவடை பணிகள் தொடக்கம்
இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாமல், அதிகப்படியான பனிப்பொழிவு இருந்ததன் காரணமாக மஞ்சள் செடிகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 முதல் 15 சதவீத செடிகளில் இலைகள் கருகலாக காணப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் பயிர்கள் அறுவடை தொடங்கியுள்ளது. மழை குறைவு மற்றும் அதிகப்படியான பனி காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டியை என்றாலே கரும்பும், மஞ்சளும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள தங்கம்மாள்புரம், சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டும் இப்பகுதி விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஆடி பட்டத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர்கள் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. இது குறித்து தங்கமாள்புரத்தை சேர்ந்த விவசாயி கேசவசெல்வன் என்ற விவசாயி கூறும்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. டெல்லி, மும்பை, கோல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக தற்போது மஞ்சள் அறுவடை நடைபெறுகிறது. உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதற்கான மஞ்சள் அறுவடை நடைபெறும்.

இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாமல், அதிகபடியான பனிப்பொழிவு இருந்ததன் காரணமாக மஞ்சள் செடிகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 முதல் 15 சதவீத செடிகளில் இலைகள் கருகலாக காணப்படுகின்றன. மேலும் இந்த ஆண்டில் விலையும் குறைவாகவே உள்ளது. ஒரு மஞ்சள் செடியை ரூ.13 முதல் ரூ.15 விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர். ஒரு சில வயல்களில் மட்டும் ரூ.18 வரை விலை போகிறது.

ஆனால், அத்தகைய செடிகள் மிகவும் குறைவு. அதேநேரத்தில் செலவு அதிகமாகியுள்ளது. ஒரு மஞ்சள் செடிக்கு ரூ.5 முதல் 8 வரை செலவாகியுள்ளது. தற்போது அறுவடை செய்து, சுத்தம் செய்து, கட்டுவதற்கு ஒரு செடிக்கு ரூ.4 செலவாகிறது. எனவே, விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பெரிய அளவில் லாபம் இல்லை. வரும் நாட்களில் தேவையை பொறுத்து ஒருவேளை விலை சற்று அதிகரிக்கலாம் என்றார்





















