தஞ்சாவூர்: குறுவை கொள்முதல் பணிகளில் இன்னமும் சுணக்கம் தான் உள்ளது. அதை விரைவுப்படுத்த வேண்டும். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உடன் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியரின் தலைமை உதவியாளர் தமிழரசி தலைமையில் நடந்தது. அப்போது விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிபட்டி கோவிந்தராஜ்: மழையால் பாதிக்கப்பட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இது குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்கிற விவசாயிகளுக்கு விதைக்கரும்பு மானியமாக ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மழை காலங்களில் நெல் சாகுபடி செய்கிற விவசாயிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே 22 சதவீதம் ஈரப்பதத்தை ஏற்றி கொடுக்க வேண்டும். அல்லது அந்த அதிகாரத்தை தமிழக அரசுக்கே வழங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சியில் 6, 9 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் பெய்த மழையினால் சாலை சேதமடைந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை நேரில் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையகரம் ஏகேஆர். ரவிச்சந்தர்: தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து நெல்மணிகள் சாய்ந்து முளைத்துவிட்டது. விளைந்த நெற்பயிர்கள் முழுவதும் பாதித்து அறுவடை செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடாக வழங்க வேண்டும். மழையால் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 எந்த நிபந்தனையும் இன்றி நிவாரணமாக வழங்க வேண்டும். சம்பா பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்று அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: பருவமழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும். ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் அய்யம்பட்டியில் இருந்து கீராத்தூர் வரை பழுதடைந்துள்ள சாலையையும் பாலத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி என்.வி.கண்ணன்: தஞ்சாவூர் கோட்டத்தில் ஒரத்தநாடு தஞ்சாவூர் பூதலூர் திருவையாறு என அனைத்து வட்டாரங்களிலும் தற்போது பெய்த மழையால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். டெல்டா முழுவதும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலைகளில் கொட்டி வைத்து அவதி அடைந்து வருகின்றனர். இதுவே முடிவல்ல எதிர்காலத்திற்கான கேள்விக்குறியும் ஆகும். எனவே அரசுகள் விவசாயத்தை விவசாயிகளை பாதுகாக்க நெல் உலர்த்த உலர் களங்கள், நெல் உலர்த்தும் இயந்திரங்களை அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் வழங்க வேண்டும். மழையால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்புகளுக்கு காலதாமதம் இல்லாமல் உடன் நிவாரணமாக நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கருப்பூர் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும்.
பெரமூர் அறிவழகன்: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்தல் என்பது பெயரளவில் இல்லாமல் உடன் அந்த தொகையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதலில் அரசியல் செய்யாமல் நீண்ட கால செயல்திட்டத்தின் குறைகளைப் போக்கி வரும் காலங்களில் தற்போதைய நிலை போல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா, தாளடி சாகுபடி தொடங்கியுள்ள இந்த நேரத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதை உடன் போக்க வேண்டும். வேலன் பொறியியல் துறையில் இ- வாடகைக்கு அறுவடை இயந்திரங்களை வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பருவம் தவறும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வருடம் முடிந்தும் நிவாரணம் என்பது அறிவிப்போடு இருப்பதை மாற்றி உடனே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
வாளமர்கோட்டை இளங்கோவன்: குறுவை கொள்முதலில் ஏற்பட்ட பிரச்சனை இனிமேல் இருக்கக் கூடாது. கடைநிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை தேவையான இடத்தில் தாலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். கள நிலவரங்களை மேலதிகாரிகள் முதல் அரசு வரை தெரிந்து உடல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையால் வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் இடங்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்.பழனியப்பன்: வரும் 30ஆம் தேதி வியாழன் அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்திற்கு தஞ்சாவூர் எம்.பி.க்கள் தஞ்சாவூர் முரசொலி, மயிலாடுதுறை சுதா, அமைச்சர் கோவி. செழியன் மற்றும் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் நிலைமை முழுமையாக தெரியவரும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடார் இளந்திரையன்: சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இது குறித்து வேளாண் துறைக்கு தகவல் தெரிவித்தால் அது காட்டு பன்றியா வீட்டு பன்றியா என கேட்கிறார்கள். இது குறித்து வேளாண்துறையினர் தான் கண்காணிக்க வேண்டும், கரூர் சம்பவத்தின் போது அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டது. ஆனால் தற்போது குறுவை கொள்முதலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அரசு சுறுசுறுப்பு காட்டவில்லை. பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.