தமிழகத்தில் குடும்பத்திற்கு தேவையான அன்றாட காய்கறி தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பட்ஜெட்டில் கையை கடிக்காமலும், பிறரிடம் கடன் வாங்கமல், பொன்னான நேரத்தை வீணடிக்காமல் குடும்ப தலைவிகளின் ஆர்வத்தை உயர்த்தி பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் 'மாடித்தோட்டம்'. மாடித்தோட்டம் 'கிட்' ஒன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறது.



கிட் ஒன்றில் தென்னை நார் கழிவுடன் கூடிய வளர் ஊடகம் அடங்கிய ஆறு பைகள், அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம், சூடோமோனாஸ் 100 கிராம், டி.விரிடி 100 கிராம், நீரில் கரையும் உரம் 18:18:18 ஒரு கிலோ, அசார்டிராக்ஷன் 100 மில்லி, திட்ட விளக்க குறிப்பு, பத்து வகையான காய்கறி விதைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இவை மாடித் தோட்டம் போட நினைப்பவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ஆகும்.

இந்த மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம். நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக வெண்டைக்காய் சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றைதான் பார்க்க உள்ளோம்.





மாடித்தோட்டம் வெண்டை சாகுபடியை பொறுத்தவரை, சிறிய பை அல்லது தொட்டிகள் போதுமானது. தேங்காய் நார் கழிவுகள் இரண்டு பங்கு, சமையலறை கழிவுகள் ஒரு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு ஆகியவற்றை கொண்டு தொட்டிகளை நிரப்ப வேண்டும். இந்த கலவையை தயார் செய்தவுடனே விதைகளை விதைத்துவிட கூடாது. ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்கு பின்பு தான் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் செடிகளை வளர்ப்பதற்காக, பை அல்லது தொட்டிகளில் மணல் கலவை நிரப்பும் போது, பை முழுவதும் மணல் கலவையை நிரப்பிவிட்டு கூடாது.

பையின் நீளத்திற்கு ஒரு அங்குலத்திற்கு கீழ் இருக்குமாறு மணல் கலவையை நிரப்ப வேண்டும். மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரை நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். பின்பு பைகளில் விதைகளை விதைத்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். ஒரு குழியில் இரண்டு விதைகள் ஊன்றலாம். நடவு செய்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும். பத்து நாட்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். ஒரு பையில் ஒரு செடியை மட்டும் வைப்பது சிறந்தது. பெரிய பையாக இருந்தால் இரண்டு செடிகள் இருக்கலாம். அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஒரே பையில் செடிகள் இருக்கக் கூடாது.

நீர் நிர்வாகம்:


மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரை விதை விதைத்த பின்பு, பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.





வெண்டைக்காய் செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒருமுறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. செடியும் நன்கு காய் பிடித்து வளராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெண்டையில் முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் அடிக்கடி நீக்க வேண்டும். இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து, மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். நடவு செய்த 30 முதல் 35-ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் முதல் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்து வந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத் தொடங்கும். பின்னர்  ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம். காய்கள் பிடிக்க ஆரம்பித்த உடன் சரியான பருவத்தில் காய்களை முற்றவிடாமல், பறித்துவிட வேண்டும்.

வெண்டைக்காயைத் தாக்கும் பூச்சிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, செந்நாவாய் பூச்சி ஆகியவை முக்கியமானவை. அசுவினித் தாக்குதலுக்கு உள்ளான இலையின் அடிப்பாகம் சுருங்கியதுபோல இருக்கும். விளிம்பு மடங்கத் தொடங்கும். தத்துப்பூச்சித் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறமாக மாறி, பிறகு பழுப்பு (பிரவுன்) நிறத்துக்கு மாறும். இலை, தீயில் வாட்டியதுபோலக் காணப்படும். இந்த இரண்டு பூச்சிகளையும் தடுக்க 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த 20-ம் நாள் முதல் ஒவ்வொரு 25 நாள் இடைவெளியில் சாகுபடிக்காலம் முடியும் வரை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.