விவசாயிகள் கொந்தளிப்பு! பி.ஆர். பாண்டியனின் சிறை தண்டனைக்கு எதிராக திரண்ட எதிராக விவசாயிகள்..
தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவரான பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சீர்காழி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவரான பி.ஆர். பாண்டியனுக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விவசாயிகள் ஏராளமானோர் திரண்டு பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி காவல் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
தண்டனைக்கான பின்னணி
கடந்த 2015-ன் ஆண்டு ONGC -க்கு எதிரான போராட்டம்
பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்துடன் தொடர்புடையது.
அப்போது, திருவாரூர் மாவட்டம் விக்ரபாண்டியம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தது. விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் பாழாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தீவிரமாகப் போராடினர்.
இந்த தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராகக் காரியமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகக் கூறி, பி.ஆர். பாண்டியன் உட்படப் பல விவசாயிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், பி.ஆர். பாண்டியன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதோடு, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக, தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவரான பி.ஆர். பாண்டியன் நேற்று கைது செய்யப்பட்டார்.
சீர்காழியில் விவசாயிகளின் குரல்
பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்ட செய்தி காட்டுத் தீயெனப் பரவியதையடுத்து, தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவரது கைதைக் கண்டிக்கும் வகையில் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
சீர்காழி காவல் நிலையம் எதிரே, கோபத்துடன் திரண்ட ஏராளமான விவசாயிகள், "விவசாயிகளின் பாதுகாவலர் பி.ஆர். பாண்டியன் கைதுக்குக் கண்டனம்!", "விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசுகளே, ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவு தருவதைத் தடுத்து நிறுத்துங்கள்!" போன்ற முழக்கங்களை உரக்க எழுப்பினர்.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது: "காரியமங்கலம் போராட்டம் என்பது விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க நடத்திய தர்மப் போராட்டம். மீத்தேன் போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்ப்பது ஒவ்வொரு விவசாயியின் கடமை. ஆனால், அரசு விவசாயிகளைப் பழிவாங்க நினைக்கிறது. ஒரு மக்கள் தலைவருக்கு, அதுவும் விவசாயிகளுக்காகப் போராடிய ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது அநீதியின் உச்சம். இது ஜனநாயகத்தில் போராட்ட உரிமைக்கே விழுந்த பேரிடி."
முக்கிய கோரிக்கை: வழக்கை ரத்து செய்து விடுதலை செய்க!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும், பி.ஆர். பாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், பி.ஆர். பாண்டியன் விடுதலை ஆகும் வரைத் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் பிற நிர்வாகிகள் சூளுரைத்தனர்.
சட்டம்-ஒழுங்கு நிலை
காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளின் தலைவர்களில் ஒருவரான பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது, இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி ஆர்ப்பாட்டத்தையடுத்து, வேறு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கக் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம் டெல்டா மாவட்ட அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.






















