கரும்பு விவசாயத்தில் சாதனை ஏக்கருக்கு 126 டன் மகசூல் – ரூ.2 லட்சம் லாபம் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற இளம் விவசாயி
கரும்பு விவசாயி
சிவகங்கை அருகே உள்ள தமராக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்திரக்குமார், கரும்பு விவசாயத்தில் ஏக்கருக்கு 126 டன் மகசூல் பெற்று, ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம் ஈட்டியதன் மூலம் மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். இதையடுத்து, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2024–25 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், கரும்பு பயிர் பிரிவில் முதல் பரிசு வழங்கி சந்திரக்குமாரை வேளாண்மைத் துறை அமைச்சர் நேரில் கௌரவித்தார். தமராக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த காசி–தவமணி தம்பதியின் மகனான சந்திரக்குமார், டிப்ளமோ சிவில் படிப்பை முடித்த பின்னர் வேலைவாய்ப்பிற்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அங்கு கடுமையான வேலைச்சூழல் மற்றும் கொத்தடிமை போன்ற நிலை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பளத்தைவிட அதிக வருமானம் ஈட்டலாம்
இந்த நிலையில், தொலைபேசியில் தாயிடம் துயரம் தெரிவித்தபோது, “நமக்கு இருக்கும் விவசாயத்தை முறையாக செய்தால், வெளிநாட்டு சம்பளத்தைவிட அதிக வருமானம் ஈட்டலாம். ஊருக்கு திரும்பி வா” என தாய் தவமணி கூறியதை தொடர்ந்து, சந்திரக்குமார் ஊர் திரும்பினார். இதையடுத்து, குடும்பத்தினருடன் இணைந்து தங்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில், 18 ஏக்கரில் கரும்பு பயிரிட்டார். நவீன தொழில்நுட்பங்கள், சொட்டுநீர் பாசனம், இயந்திர அறுவடைக்கு ஏற்ற இடைவெளி, திட்டமிட்ட சாகுபடி மற்றும் கடின உழைப்பின் மூலம், ஒரு ஆண்டில் ஏக்கருக்கு 126 டன் மகசூல் பெற்றார். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளார். இந்தச் சாதனையின் அடிப்படையில், மாநில அளவிலான கரும்பு விளைச்சல் போட்டியில் முதல் பரிசு பெற்ற சந்திரக்குமார், “நல்ல முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும்” என தெரிவித்தார். மேலும், கரும்பு விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வேளாண்மைத் துறை அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறினார்.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…” என பாடலாசிரியர் மருதகாசி எழுதிய பாடல் வரிகளுக்கு ஏற்ப, வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களுக்கு, சந்திரக்குமார் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.