தஞ்சாவூர்: மும்முனை மின்சாரம் சரியானபடி விநியோகம் செய்யாததால் 150 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோயா பீன்ஸ் செடிகள் கருகி வருவதால் பந்தநல்லூர் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்துள்ளார் மன்னன் கரிகாலச்சோழன்.


முப்போகம் சாகுபடி நடக்கும் நெற்களஞ்சியம்


சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி என விவசாயிகள் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது. நெல் மட்டுமின்றி கரும்பு, வெற்றிலை, வாழை, காய்கறிகள், பூக்கள் என்று விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் சோயா பீன்ஸ் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.




மும்முனை மின்சாரம் சீராக இல்லை


ஆனால் பந்தநல்லூர் பகுதியில் மும்முனை மின்சாரம் சீராக விநியோகம் செய்யாததால், போதிய தண்ணீரின்றி சோயா பீன்ஸ் செடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர், திருப்பனந்தாள் பகுதிகளில் விவசாயிகள் 150 ஏக்கரில் பம்புசெட் மூலம் சோயா பீன்ஸ் சாகுபடி செய்திருந்தனர். தற்போது பிஞ்சும், காய்களும் உள்ள நிலையில், இன்றும் மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்பட இருந்தது.


காய்ந்து கரும் சோயா பீன்ஸ் செடிகள்


இந்நிலையில், பம்புசெட்டுக்கு மும்முனை மின்சாரம் என்பது பற்றாக்குறையாகவே வருகிறது. போதிய மின்சாரம் இல்லாத காரணத்தாலும், குறைந்தழுத்த மின்சார விநியோகத்தாலும் பம்புசெட் இயங்குவதில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் சோயா பீன்ஸ் செடிகள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடனுக்கு வாங்கி சோயா பீன்ஸ் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.


விவசாயிகள் வேதனை


இதுகுறித்து நெய்குப்பம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: பந்தநல்லூர், திருப்பனந்தாள், குறிச்சி உள்ளிட்ட பகுதியில் வேளாண்மைத்துறை ஆலோசனையின் படி சோயா பீன்ஸ் சாகுபடி மேற்கொண்டோம். மகசூல் அதிகம் கிடைக்கும், லாபமும் இருக்கும் என்பதால் சோயா பீன்ஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டினோம்ட. இன்னும் சில வாரங்களில் சோயா பீன்ஸ் அறுவடை செய்யப்பட இருந்த்து.


இந்நிலையில் மும்முனை மின்சாரம் முறையாக விநியோகம் செய்யப்படாததால், போதிய தண்ணீர் இல்லாமல் செடிகள் கருகி வருகிறது. கடனை வாங்கி ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும், மகசூல் இழப்பு ஏற்படும் நிலையில் இருக்கிறோம். எனவே, எஞ்சிய பயிரை காப்பாற்ற மும்முனை மின்சாரம் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மின்வாரிய அதிகாரிகள் கருத்து


இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தரப்பில் கூறுகையில், மும்முனை மின்சாரம் என்பது பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் விநியோகம் செய்யப்படுகிறது. இருந்தாலும் மும்முனை மின்சாரத்தில் அவ்வப்போது தடங்கல் இருப்பதால், மின் மோட்டார்கள் இயங்குவதில் சிக்கல் உள்ளது. விவசாயிகள் பலரும் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். நாங்களும் சீராக மின் விநியோகம் செய்ய துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்றனர்.


எது எப்படி இருந்தாலும் சீரான மின் விநியோகம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.