தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி - ராசியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் சில காலம் இணைந்து பயணித்துள்ளார். இவர் பாரம்பரியமிக்க கற்காணம் என்னும் கல் செக்கில் காங்கேயம் காளைகளை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, எம்.பி.ஏ பட்டதாரியான சரவணன், துபாய் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் லட்சத்தில் சம்பளம் கிடைக்கும் வேலையை உதறி விட்டு, ஊர் திரும்பி தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் தென்னையும், 10 ஏக்கர் நிலத்தில் எள், நிலக்கடலையை பயிர் செய்தார். உரம், மருந்து தெளிக்காமல், பஞ்சகவ்யம், இயற்கை மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமிலம் பயன்படுத்தி, விளைவித்த பொருட்களை அப்படியே விற்பனை செய்தால், குறைந்த வருவாயே கிடைக்கும் நிலையில், இதனை எண்ணெய்யாக மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்பதோடு, நுகர்வோருக்கு, நஞ்சற்ற நல்ல தரமான எண்ணெயை வழங்க முடியும் எனக்கூறுகிறார் சரவணன்.
இதற்காக ராசியங்காடு மற்றும் நான்கு இடங்களில் இயற்கை முறையில் வாகை மர கல்செக்கு (கற்காணம்) அமைத்து, எண்ணெய் பிழிந்து விற்பனை செய்து வருகிறார். செக்கில் எண்ணெய் பிழிவதற்காக ரூபாய் 1.50 இலட்சம் மதிப்பிலான காங்கேயம் இனக் காளைகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகளுக்காக தீவனச் செலவே நாள் ஒன்றுக்கு ரூ.600 செலவழிப்பதாக கூறும் சரவணன், காளைகளை கொசுக்கடிக்காமல் பாதுகாக்க மின்விசிறி அமைத்தும், தனியாக அறையும், அதனை கண்காணிக்க சிசிடிவியும் அமைத்து பாதுகாத்து வருகிறார். இந்தக் காளைகளையும் சொந்த பிள்ளைகளைப் போல் பாவித்து வருகிறார் சரவணன். மேலும், காளைகளை பராமரிக்கவும் எண்ணெய் செக்கிலும், தனது விளைநிலங்களிலும், ஏராளமான கிராமத்தவர்களுக்கு பணி வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளார் சரவணன்.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், "சாதாரணமாக இரசாயன உரம் பயன்படுத்தும் வயல்களில் கிடைக்கும் விளைச்சலை விட, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் சாகுபடியில் 25 விழுக்காடு கூடுதல் விளைச்சல் கிடைப்பது கண்கூடாக தெரிகிறது.
ஐந்தாயிரம் கிலோ தேங்காயை விற்பனை செய்தால், கிலோ ரூபாய் 10 என, ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கும். இதையே எண்ணையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். எண்ணையை இயந்திரத்தின் மூலம் பிழிவதை விட, இயற்கையான முறையில் வாகை மர நாட்டு கல் செக்கில் பிழிந்து விற்பனை செய்கிறேன். இவ்வாறு இயற்கை முறையில் எண்ணெய் பிழியும்போது எண்ணெய் சூடாவதில்லை. அதில் உள்ள உயிர் சத்துக்கள் முழுமையாக அப்படியே கிடைக்கும். உணவும் ருசிக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் அதே போல் நல்லெண்ணெய் ஆட்டும் போது கருப்பட்டியும் வெல்லமும் சேர்க்கப்படுகிறது.
நிலக்கடலையை பொறுத்தவரை சராசரியாக 50 கிலோ மூட்டைக்கு ரூ.4500 முதல் 5000 வரை விலையாக கிடைக்கிறது. அதையே எண்ணையாக தயாரித்து விற்கும் போது பல மடங்கு லாபம் கிடைக்கிறது. ஒரு மூட்டை நிலக்கடலை மூலம் 22 லிட்டர் எண்ணெய் பிழியலாம். ஒரு லிட்டர் எண்ணெய் தற்போது 360 வரை விற்பனை செய்யப்படுகிறது 22 லிட்டர் எண்ணெய் மூலம் 7,920 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கு மூலம் தனியாக ரூ.1,250 வருமானம் கிடைக்கும்.
அதேபோல் சந்தையில் எள் கிலோ 90 முதல் 120 வரை விற்கப்படுகிறது. சராசரியாக ரூபாய் 100 கிடைக்கும் என்றால் 50 கிலோ எடை கொண்ட எள் மூடைக்கு ஐந்தாயிரம் மட்டுமே விலை கிடைக்கும். ஒரு மூட்டை எள்ளை பிழிந்தால், 20 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் தற்போது ரூ. 550 வரை விற்பனை செய்யப்படுகிறது. 20 லிட்டர் எண்ணெய் மூலம் 11 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் கிடைக்கும் 25 கிலோ புண்ணாக்கு மூலம் ரூ.750 தனியாக வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு ஒரு முறை எள்ளுக்கு 11 ஆயிரத்து 750 ரூபாய் கிடைக்கிறது.
தற்போது, பொதுமக்களிடம் காணப்படும் பல்வேறு நோய்களுக்கும், மாரடைப்புக்கும் காரணமாக இருப்பது கலப்பட எண்ணெய் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். எனவே, விலை சற்றே கூடுதலாக இருந்தாலும், இயற்கை முறையில் பிழியப்படும், செக்கு எண்ணெய்க்கு நல்ல கிராக்கி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் எண்ணெய் வகைகளை அனுப்பி வருகிறோம். நீங்கள் எங்களிடம் வாங்கி பயன்படுத்துவது ஆயில் அல்ல அது உங்கள் ஆயுள்" என்கிறார் சரவணன்.
மேலும், தமிழகம் முழுவதும் இயற்கை முறையில் எண்ணெய் வித்துக்களை பயிர் செய்யும் விவசாயிகளிடமிருந்து தேங்காய், எள் கடலை ஆகியவற்றை கொள்முதல் செய்து அவர்களுக்கும் நல்ல வருமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை அப்படியே விற்காமல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் உரிய லாபம் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், இயற்கை முறையில் நாட்டு வாகை மரச்செக்கு அமைத்து எண்ணெய் தயாரிக்க விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் அளிக்க தயாராக தெரிவிக்கும் சரவணன் தன்னை 8098364342 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். பட்டுக்கோட்டையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் அங்காடியையும் இவர் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.