தருமபுரி அருகே தண்ணீர் பற்றாக்குறையால் பூச்சி தாக்குதலுக்கு உட்பட்டு காய்ந்து கருகும் சாமந்தி பூக்களால் ரூ. 2 லட்சம் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

 

தருமபுரி மாவட்டம் தொப்பூர், உம்மியம்பட்டி, முத்தம்பட்டி, தொண்டகரள்ளி, கோம்பை, கணவாக்காடு, பெட்டிக்குள் கோம்பை, கருங்கலூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பூக்கள், காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிகப்படியான விவசாயிகள் வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட கலர் சாமந்தி பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் தருமபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துக் போனதால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொம்மிடி, தொப்பூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சாமந்தி பூக்களில், தண்ணீர் பற்றாக்குறையால் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் அறுவடை செய்கின்ற சமயத்தில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பூக்களின் விலை ஐந்து ரூபாய் கூட எடுப்பதற்கு ஆள் இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் அறுவடை செய்கின்ற கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வயலிலேயே விட்டுள்ளனர்.



 

மேலும், சாமந்தி பூக்களுக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். எப்பொழுதும் குளிர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே, பூக்கள் செழிப்பாக இருக்கும் நல்ல விலை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாத காரணத்தினால் பூக்கள், பூச்சி தாக்குதலுக்கு உள்ளானது. இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள், அருகில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி தெளித்து வருகின்றனர். ஆனால் அப்பொழுது கூட பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சாமந்திப்பூவை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இந்த ஆண்டு ஒரு செடி இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஏக்கருக்கு பத்தாயிரம் செய்திகளை வைத்து, மருந்து தெளித்து பராமரித்து வந்துள்ளனர். இதற்காக ஏக்கருக்கு 2 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஆனால் அறுவடை செய்ய இருக்கின்ற சமயத்தில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளானதால், முதலீடு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாமல் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். 



 

எனவே தோட்டக்கலைத் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு செய்து, பூச்சி தாக்குதலுக்குரிய காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் அந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் இது அறுவடை செய்து விற்பனை செய்திருந்தால் மூன்று லட்சம் முதல் 4 லட்சம் வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் செலவு செய்த ரூ.2 லட்சம் கூட எடுக்க முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே அடுத்து பயிர் செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலரிடம் கேட்டபோது, தொப்பூர் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சாமந்திப் பூக்களில் பூச்சி தாக்குதலுக்குள்ளான குறித்த புகார்கள் தோட்டக்கலைத் துறையினருக்கு வரவில்லை. எனவே தொப்பூர் மற்றும் பொம்மிடி பகுதிகளுக்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனரை அனுப்பி வைத்து, நேரில் கள ஆய்வு செய்து, அந்த பூச்சி தாக்குதலுக்கு உள்ளான காரணத்தை கண்டறிந்து அதற்கான மருந்துகளை பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.