தஞ்சாவூர்: மேட்டூர் அணை நடப்பாண்டு இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது.

Continues below advertisement

மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்காக இதுவரை திறக்க இயலாத நிலை நிலவுகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரமுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை பருவ நெல் சாகுபடியைத் தொடங்கினர். ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனர்.

Continues below advertisement

இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி நடப்பாண்டு காவிரி நீர் வரத்து இல்லாததால், இலக்கும் ஏறக்குறைய 4.10 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை பருவத்துக்கான நெற் பயிர் நடவு காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கராகவும், திருவாரூர் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கர் இலக்கில் 1.15 லட்சம் ஏக்கராகவும் குறுவை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 200 ஏக்கர் என்ற இலக்கை விஞ்சி 98 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 4,300 ஏக்கராக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 4.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 3.68 லட்சம் ஏக்கர் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 1.97 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீரும் குறைந்து வருவதால், ஆழ்குழாயை நம்பி நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததாவது:

முன் பட்டத்தில் குறுவை சாகுபடியைத் தொடங்கியவர்களில் சிலர் அறுவடை செய்துள்ளனர். பலர் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையிலுள்ள பயிர்களுக்கு பாதிப்பு இருக்காது. காவிரி நீர் வராத நிலையில், பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. சில இடங்களில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் உவர் நீராக மாறி வருகிறது. 

மழையும் பெய்யாத நிலையில், நடவு செய்து ஒரு மாதத்துக்கு உள்பட்ட மற்றும் மூன்றாவது உரமிடும் தருணத்தில் உள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து மழை பெய்தால்தான் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

இதனிடையே, அறுவடை செய்த விவசாயிகளும் தாளடி சாகுபடியைத் தொடங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். காவிரி நீர் வரத்து, வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து, இரு மாதங்கள் கழித்து அடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்கலாம் என இருக்கிறோம். இதேபோல, ஒரு போக சம்பா சாகுபடியையும் தொடங்குவதற்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

டெல்டா மாவட்டங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து குறுவை, சம்பா சாகுபடிகளில் அமோக விளைச்சல் கிடைத்து வந்தது. இதனிடையே, 2024 ஆம் ஆண்டில் மேட்டூர் அணை திறப்பு தாமதமானாலும், குறுவை சாகுபடியில் பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நடப்பாண்டு சூப்பர் எல் நினோ ஆண்டாக இருப்பதால், நீர் ஆதாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் முதல் பருவமான குறுவை சாகுபடியே கேள்விக்குறியாக இருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை சாகுபடிப் பரப்பளவு (ஏக்கரில் கடந்தாண்டும், இந்தாண்டும்)

தஞ்சாவூர்  - 1.99 லட்சம் - 1,51,525

திருவாரூர் - 1.93 லட்சம் - 1,15,845

மயிலாடுதுறை - 99,253 - 98,500

நாகை - 75,250  - 4,300

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் பம்ப்செட்டுகளை வைத்து சாகுபடி பணிகளை செய்துள்ளனர். சம்பா சாகுபடிக்காவது காவிரி நீர் வருமா என்ற  எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இயற்கை கை கொடுக்குமா? கொடுத்தால்தான் நெற்களஞ்சியம் பசுமையை போர்த்தும்.